காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றின விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் நான்கு கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. இந்த தேர்தலில் பாஜக கையில் எடுத்துள்ள முக்கிய பிரசார ஆயுதம் ‘பயங்கரவாதிகள் முகாமில் இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்’. தேர்தல் பரப்புரையின் போதெல்லாம் பிரதமர் மோடி உட்பட பாஜகவினர் இதனை குறிப்பிட மறப்பதில்லை. அதோடு, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ராணுவத்திற்கு உரிய சுதந்திரம் அளித்ததில்லை என்று பாஜக குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பிரதமாராக மன்மோகன் சிங் இருந்த போது 6 சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்ததாக தற்போது காங்கிரஸ் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக காங்கிரஸ் தலைவர் ராஜூவ் சுக்லா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தங்கள் ஆட்சியின் போது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக காங்கிரஸ் கூறுவது இது முதல் முறை இல்லை என்றாலும், தாக்குதல் நடத்திய தேதிகளுடன் குறிப்பிட்டுள்ளது இதுவே முதல் முறை. 2008 முதல் 2014 வரை இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
முதல் தாக்குதல் ஜூன் 19, 2008-ல் பூஞ்சின் பாத்தால்(Bhattal) பகுதியில் நடத்தப்பட்டது. 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நீலம் ஆற்றுப் பள்ளத்தாக்கில் உள்ள சார்தா பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பிறகு, 2013ல் ஜனவரி 6 அன்று சுவான் பாத்ரா தணிக்கைச் சாவடி பகுதியில் நடத்தப்பட்டது. 2013-ம் ஆண்டு ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் நசாபியர் பகுதியில் நடத்தப்பட்டது.
பயங்கரவாதிகளுக்கு எதிரான ஐந்தாவது தாக்குதல் அதே ஆண்டு ஆகஸ்ட் 6 மீண்டும் நீலம் பள்ளத்தாக்கில் நடத்தப்பட்டது. கடைசி தாக்குதல் ஜனவரி 14, 2014-ல் நடந்ததாக் காங்கிரஸ் தலைவர் ராஜூவ் சுக்லா தெரிவித்தார்.