எதிரிகளை விமர்சிக்கக் கூடாதா...? பஜனை பாடச் சொல்றீங்களா..? தேர்தல் ஆணையத்துக்கு உ.பி.முதல்வர் கேள்வி

UP CM Yogi Adityanath on EC notice , dais is to attack opposition, not for bhajans

by Nagaraj, May 3, 2019, 21:39 PM IST

தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்து வரும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம் .இதற்கு, தேர்தல் பிரச்சார மேடையில் எதிர்த்தரப்பினரை விமர்சிக்காமல் வெறும் பஜனையா பாட முடியும்? என்று எதிர்க் கேள்வி கேட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

உ.பி.யில் சர்ச்சைக் கருத்துக்களைக் கூறி பிரச்சாரம் செய்வதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று அனைத்துக் கட்சித் தலைவர்களுமே ஆவேசமாக பேசி வருகின்றனர். தேர்தல் ஆணையமும் நோட்டீஸ் விட்டதுடன், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத், பகுஜன் கட்சித் தலைவர் மாயாவதி, மத்திய அமைச்சர் மேனகா காந்தி, சமாஜ்வாதி மூத்த தலைவர் அசம்கான் போன்றோருக்கு 48 மணி நேரம், 72 மணி நேரம் பொது வெளியில் அரசியல் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டு தண்டனையும் கொடுத்தது.

ஆனாலும் தேர்தல் நடத்தை விதிகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகள் விதித்தாலும், அதனை மீறத்தான் செய்வோம் என்ற ரீதியில் உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத் பேசி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சாம்பால் என்ற இடத்தில் முஸ்லீம்களைப் பற்றியும், பாபர் பற்றியும் பேசியதற்கு, நேற்று மீண்டும் நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம் , 2 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்றும் கெடு விதித்தது.

இந்த நோட்டீஸ் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள யோகி ஆதித்ய நாத், தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்த்தரப்பினரை விமர்சித்தால் தான் மக்களிடம் ஓட்டுக்களை பெற முடியும். அதை விடுத்து மேடையில் பஜனையா பாட முடியும். ஒருவருக்கொருவர் விமர்சிப்பதை எல்லாம் தேர்தல் நடத்தை விதி மீறல் என்றால், அப்புறம் எப்படித் தான் பிரச்சாரம் செய்வது என்று தேர்தல் ஆணையத்தை சாடியுள்ளார் யோகி ஆதித்யநாத் . தேர்தல் ஆணையம் விதித்த 2 நாள் கெடு முடிவடையும் நிலையில், பஜனை பாடவா முடியும் என்று யோகி விமர்சனம் செய்துள்ளது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.

You'r reading எதிரிகளை விமர்சிக்கக் கூடாதா...? பஜனை பாடச் சொல்றீங்களா..? தேர்தல் ஆணையத்துக்கு உ.பி.முதல்வர் கேள்வி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை