டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தின் ஈடுபட்டுருந்த அம்மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவாலை, இளைஞர் ஒருவர் கன்னத்தில் சரமாரியாக அறை விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
மக்களவைத் தேர்தலில், டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அங்கு காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவினாலும், உண்மையான போட்டி பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்கு இடையே தான்.
ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக டெல்லி முதல்வரும் அக் கட்சித் தலைவருமான கெஜ்ரிவால் இன்று மாலை டெல்லி மோதி நகர் பகுதியில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். மைக் பிடித்து கெஜ்ரிவால் பேசிக் கொண்டிருந்த சமயம் சிவப்பு நிற உடை அணிந்திருந்த இளைஞர் ஒருவர் திடீரென வாகனத்தில் தாவிக் குதித்து கெஜ்ரிவாலின் கன்னத்தில் சரமாரியாக அறை விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆம் ஆத்மி கட்சியினர் அந்த இளைஞரைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கெஜ்ரிவாலை அறைந்த அந்த இளைஞர் பெயர் சுரேஷ் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்துக்கு பாஜகவின் திட்டமிட்ட சூழ்ச்சியே காரணம் என்றும், தோல்வி பயத்தால் மக்களைத் திசை திருப்ப பாஜக இது போன்ற சூழ்ச்சிகளை கையாள்வதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.