துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை தொடர்ந்து சீண்டி வரும் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன், பிரதமர் மோடி முன்னால் காவி வேட்டி கட்டியது குறித்தும் விமர்சித்துள்ளார்.
பொதுத் தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத் தேர்தல் முடிந்த சூட்டோடு, துணை முதல்வர் ஓபிஎஸ் வாரணாசி சென்று பிரதமர் மோடி சந்தித்த விவகாரம் அமமுகவினருக்கு அல்வா சாப்பிட்டது போல் இருக்கிறது போலும். குறிப்பாக தங்க தமிழ்ச்செல்வன், ஓபிஎஸ் பற்றி தாறுமாறாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் வருகிறார்.
தேர்தல் முடிவுக்குப் பின் ஓபிஎஸ் பாஜகவில் சேரப்போகிறார் என்று தங்க தமிழ்ச்செல்வன் கொளுத்திப் போட்டார். இதனால் ஏகத்துக்கும் டென்ஷனான ஓபிஎஸ், செத்தாலும் என் மீது அதிமுக கொடிதான் போர்த்தப்படும் என்ற ரீதியில் 4 பக்க நீண்ட அறிக்கையைக் கொடுத்து விளக்கமளித்தார். ஆனாலும் தங்க தமிழ்ச்செல்வன் விடுவதாக இல்லை. பாஜக பக்கம் போகப் போவது உறுதி என்று கூறி தொடர்ந்து ஓபிஎஸ்சை வம்புக்கிழுத்து வருகிறார்.
இன்று திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், பதவி ஆசைக்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர் ஓபிஎஸ். முருகனுக்கோ, ஐயப்பனுக்கோ காவி வேட்டி கட்டுவது வேறு. ஆனால் வாரணாசி சென்று மோடி முன்பு ஓபிஎஸ் காவி வேட்டி கட்டியது எதற்காக? சுயநலம் தானே? ஆனாலும் இந்தத் தேர்தலுக்குப் பின் துணை முதல்வர் என்ற பதவியுடனே அவரது எல்லை முடிந்துவிடும்.
ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக வாக்குகள் திமுகவுக்கு விழும் என்று மு.க.ஸ்டாலின் தவறான பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் அதிமுக வாக்குகள் அமமுகவுக்குத்தான் விழும். பரிசுப் பெட்டிக்கு விழுந்தஓட்டுக்கள் ஓட்டுப்பெட்டிக்குள் பத்திரமாக உள்ளது.இந்தத் தேர்தலில் அமமுக ஜெயிப்பது நிச்சயம். உடனே அதிமுக அரசை கவிழ்க்கப் போவதும் உறுதி என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.