அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்திக்கும் வாக்களிக்குமாறு தனது கட்சித் தொண்டர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முமுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை பொதுத் தேர்தலில் இதுவரை 4 கட்டங்களில் 373 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று 5-ம் கட்டமாக 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உ.பி, பீகார், மே.வங்கம், ஜார்க்கண்ட், ம.பி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று நடைபெறும் தேர்தலில் முக்கிய விஐபிகள் தொகுதிகளும் அடங்குகிறது.
உ.பி.யில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி, சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி ,பாஜக மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ தொகுதிகளும் அடங்கும்.அமேதி, ரேபரேலி தொகுதிகளில் ராகுலையும், சோனியாவையும் எதிர்த்து சமாஜ்வாதி -பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தாத நிலையில், அங்கு காங்கிரஸ் - பாஜக இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் அங்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இரு தொகுதிகளிலும் பகுஜன் மற்றும் சமாஜ்வாதி தொண்டர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்குமாறு மாயாவதி பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.காங்கிரசுடன் இதுவரைக்கும் கூட்டணி வைக்காத மாயாவதி, அக்கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்வது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.