இரட்டை குடியுரிமை விவகாரம் - ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

Petition against Congress leader Rahul Gandhi on citizenship issue dismissed in SC:

by Nagaraj, May 9, 2019, 13:06 PM IST

இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளில் இரட்டை குடியுரிமை வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம் . வெற்று காகிதங்களை அடிப்படையாக கொண்டு ராகுலை பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறி விட்டது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது பிரிட்டன் நாட்டில் உள்ள நிறுவனத்தில் சில முதலீடுகளை செய்திருப்பதாக தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். பிரிட்டன் குடிமகன் என்ற முறையில் அவர் அந்த முதலீட்டை செய்ததாக எதிர்க்கட்சிகள் அப்போது சுட்டிக்காட்டி வந்தனர். மேலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற ராகுல் காந்தியின் பட்டமளிப்பு சான்றிதழில் அவரது பெயர் ராகுல் வின்சி என்ற இத்தாலிய துணைப்பெயருடன் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்திய குடியுரிமை மட்டுமின்றி, இங்கிலாந்து குடியுரிமையையும் பெற்றிருப்பதாகவும், இது தொடர்பாக நீதிமன்றம் ஆய்வு செய்து, அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த ஜெய் பகவான் கோயல் மற்றும் சந்திர பிரகாஷ் தியாகி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த இரட்டை குடியுரிமை விவகாரத்தை முன்வைத்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பான நிலைப்பாட்டை 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது.

ராகுல் காந்திக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இந்திய குடியுரிமை இருப்பதால் தான் அவர் தேர்தலில் போட்டியிட முடிகிறது. இந்தியாவில் இரட்டை குடியுரிமை சாத்தியமில்லை. இரட்டை குடியுரிமை பெற்றால் எவ்வாறு அவர் தேர்தலில் போட்டியிடுவார்? என்று கேள்வி எழுப்பியதோடு, ராகுலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ராகுலை விட்டுவிட்டு ராஜீவ் காந்தியை விமர்சிப்பதா?- மோடிக்கு பாஜகவிலேயே எதிர்ப்பு

You'r reading இரட்டை குடியுரிமை விவகாரம் - ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை