தமிழகத்தில் வரும் 19-ந் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது தலைமை தேர்தல் ஆணையம். மேலும் சில வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் 18-ந் தேதி மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில், தருமபுரி மற்றும் பூந்தமல்லி தொகுதிகளில் உள்ள 10 வாக்குச்சாவடிகளில் முறைகேடு புகாரின் பேரில் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரைத்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு முன்னரே அறிவித்திருந்தார். ஆனாலும் தேர்தல் ஆணையம் தரப்பில் மறுவாக்குப்பதிவு நடத்துவது பற்றிய அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் தான் தேனி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களுக்கு திடீரென வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப் பட்ட விவகாரம் விசுவரூபமெடுத்தது. இதற்கு விளக்கமளித்த தமிழக தேர்தல் அதிகாரி சாகு, தமிழகத்தில் 46 இடங்களில் வாக்குப்பதிவில் தவறு நடந்துள்ளது. அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த அறிவிப்பு வெளியாகும் என்பதால், முன்கூட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதாக கூறியிருந்தார். தேர்தல் அதிகாரி சாகுவின் இந்த திடீர் விளக்கம் அரசியல் கட்சிகளுக்கு மேலும் சந்தேகத்தை எழுப்பியது.
முறைகேடு புகார் எதையும் கட்சிகள் முன்வைக்காத போது 46 இடங்களில் தவறு நடந்துள்ளது என்பதை 20 நாட்களுக்குப் பின் அறிவிக்க வேண்டிய அவசியமென்ன? என்ற கேள்விகளும் எழுந்தன.
இதையெல்லாம் சட்டை செய்யாத தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10 வாக்குச்சாவடிகளுடன் தேனியில் 2 , ஈரோட்டில் 1 என எண்ணிக்கையைக் கூட்டி, 13 பூத்களில் வரும் 19-ந்தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவித்தது.அதன்படி மறு வாக்குப் பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம்:
தர்மபுரி தொகுதியில் அய்யம்பட்டியில் உள்ள181, 182-ம் எண் வாக்குச்சாவடிகள் மற்றும் நத்தமேட்டில் உள்ள 192,193,194, 195, 196, 197-ம் எண் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையத்தில் 195-ம் எண் கொண்ட வாக்குச்சாவடி, பண்ருட்டி தொகுதியில் உள்ள திருவாதிக்கையில் உள்ள 210 -ம் எண் கொண்ட வாக்குச்சாவடி, ஈரோடு மாவட்டம் காங்கேயம் திருமங்கலத்தில் 248 -ம் எண் கொண்ட வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரத்தில் 67-ம் எண் வாக்குச்சாவடி, பெரியகுளம் தொகுதி வடுகபட்டியில் 197 -ம் எண் வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நான்கு இடங்களில் தவறு நடந்துள்ளதாக அம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாகு, 46 இடங்களில் தவறு நடந்துள்ளது என நேற்று கூறியிருந்தார். ஆனால் அதில் 3 இடங்களில் மட்டுமே தற்போது மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவு வந்துள்ளது. இதனால் மறுவாக்குப்பதிவு குறித்த அடுத்த பட்டியல் வெளியானாலும் ஆச்சர்யமில்லை என்று கூறப்படுகிறது.