கிழக்கு டெல்லியில் தம்மை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மியின் பெண் வேட்பாளரை தரம் தாழ்ந்து விமர்சித்த விவகாரம் கிரிக்கெட் வீரரும் பாஜக வேட்பாளருமான கவுதம் காம்பீருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. காம்பீர் மீது அவதூறு வழக்கு போடப் போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறும் நிலையில் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது. இதில் கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீருக்கும், ஆம் ஆத்மி பெண் வேட்பாளரும் பிரபல கல்வியாளருமான அதி சி மர்லேனா இடையேயான தனி நபர் விமர்சனம் உக்கிரமடைந்துள்ளது என்றே கூறலாம்.
தன்னைப் பற்றி தரம் தாழ்ந்து மோசமான வார்த்தைகளையும், ஜாதி ரீதியாகவும், இன ரீதியாகவும் விமர்சித்து துண்டுப்பிரசுரங்களை காம்பீர் விநியோசித்ததாக அதிசி நேற்று குற்றம் சாட்டியிருந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் கண்ணீர் விட்டும் கதறி அழுதார். ஆனால் காம்பீரோ, தான் தவறாக எதுவும் செய்யவில்லை. தம்மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் உடனே அரசியலை விட்டு விலகுவதாகவும் சவால் விட்டிருந்தார். மேலும் தம் மீது அவதூறு பரப்புவதாகக் கூறி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி வேட்பாளர் அதிசி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பிய ருந்தார் காம்பீர்.
காம்பீர் நோட்டீஸ் அனுப்பியதற்கு ஆம் ஆத்மி தரப்பில் டெல்லி துணை முதல்வர் கொந்தளித்துள்ளார். தரம் தாழ்ந்தும், அவதூறாகவும், மோசமாகவும் விமர்சித்தது காம்பீர் தான். அவர் வெளியிட்ட விளம்பர பிட் நோட்டீசில் உள்ள வாசகங்கள் அருவெறுப்பானவை. அரசியலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை டிவி விவாதங்களைப் பார்த்தாவது காம்பீர் திருந்த வேண்டும்.தான் செய்த தவறை மறைக்கு எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நாடகமாடுகிறார். உண்மையில் நாங்கள் தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும். அதனால் இன்றே நோட்டீஸ் அனுப்பி, தொடர்ந்து வழக்கும் போட உள்ளோம் என்று மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
கிழக்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் பெண் வேட்பாளரை மோசமாகவும், தவறாகவும் சித்தரித்து நோட்டீஸ் வெளியிட்ட விவகாரம் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக வே கூறப்படுகிறது. காம்பீரின் செயலுக்கு பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்து பிரச்சாரத்தின் கடைசிக் கட்டத்தில் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார் காம்பீர் என்றே கூறலாம்.