தினகரன் ஆதரவு எம்எல்ஏவான கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு, சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக அதிமுக கொறடா ராஜேந்திரன் கொடுத்த புகாரில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய 3 பேருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் சபாநாயகர் மீது திமுக தரப்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுத்திருப்பதை காரணம் காட்டி அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் உள்ள போது, சபாநாயகர் தங்கள் மீது நடவடிக்கை தடை விதிக்க வேண்டும் என்று இருவரும் முறையிட்டனர். இந்த வழக்கை கடந்த திங்களன்று விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சபாநாயகரின் நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், பதிலளிக்குமாறு சபாநாயகருக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில் மற்றொரு எம்எல்ஏவான கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தனக்கும் பொருந்துமா? என்ற குழப்பத்தில், பதில் சட்டப்பேரவை செயலரிடம் மனு கொடுத்தார். ஆனால் முறையான பதில் கிடைக்காததால், சபாநாயகரின் நோட்டீசுக்கு தடை கோரி பிரபுவும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. ஏற்கனவே ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் மனு மீது உத்தரவிட்டது போல், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கும் இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம் .
3 எம்எல்ஏக்களுக்கும் கடந்த வாரம் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார், அதில் நோட்டீஸ் கிடைத்த ஒரு வாரத்திற்குள் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியிருந்தார். அந்தக் காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பதற்கு, சபாநாயகர் தரப்பில் இருந்து இதுவரை எந்த வித கருத்தும் வெளிப்படாமல் உள்ளது. இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவை சபாநாயகர் ஏற்பாரா? அல்லது தனக்குத்தான் அதிக அதிகாரம் என்று கூறி 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கான விடை வரும் திங்கட்கிழமை தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.