மக்களவைக்கு 6-வது கட்டமாக இன்று 59 தொகுதிகளில் நடைபெறுகிறது. கடந்த 2014 தேர்தலில் இந்த 59 தொகுதிகளில் 44 தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜக கூட்டணிக்கு, இந்த முறை பாதி இடங்கள் கிடைப்பதே சந்தேகம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவைத் தேர்தலில் 6-வது கட்டமாக 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தில்14, அரியானாவில்10, மே.வங்கத்தில் 8, பீகார் 8, மத்திய பிரதேசம் 8, டெல்லி 7, ஜார்க்கண்ட் 4 , என 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
மே.வங்கத்தைத் தவிர்த்து முழுக்க இந்தி பேசும் இந்த வட மாநிலங்களில் கடந்த 2014-ல் நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த 59 தொகுதிகளில் 44 இடங்களில் பாஜகவும் அதன் கூட்டணியான லோக் ஜனசக்தி கட்சியும் கைப்பற்றி இருந்தன.காங்கிரஸ் கட்சிக்கு இந்த 59 தொகுதிகளில் 2 இடங்களே கிடைத்திருந்தன.
ஆனால் இந்தத் தடவை பாஜகவுக்கு 2014-ம் ஆண்டு தேர்தலில் கிடைத்தது போல 44 இடங்களில் வெற்றி கிடைக்குமா? என்பது கேள்விக்குறி தான்.
தற்போதைய நிலவரப்படி இந்த 44 இடங்களில் பாதி இடங்களை பா.ஜனதா இழக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால் 6-வது கட்ட தேர்தல் பாரதிய ஜனதாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது.
இதுவரை நடந்துள்ள 5 கட்ட தேர்தல்கள் மூலம் 424 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்துள்ளது. இன்று நடக்கும் 59 தொகுதிகளையும் சேர்த்து 483 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்று விடும்.
கடைசிக் கட்டமாக 19-ந்தேதி 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் அத்துடன் 542 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்து விடும். 23-ந்தேதி வாக்குகள் எண்ணி முடிவுகள் வெளியாக உள்ளது.