கண்டனக் குரல் எழுந்தால் தான் நியாயம் கிடைக்குமோ..? நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு மாற்று வீடு - தமிழக அரசு உறுதி

TN deputy CM OPS assures to nallakannu to allot housing board house to him and ex minister kakkan family

May 12, 2019, 12:14 PM IST

தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவரான மூத்த தோழர் நல்லகண்ணு, காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்து வறுமையில் வாடி மறைந்த கக்கன் குடும்பத்தினருக்கு மாற்று வீடு வழங்க தமிழக அரசு உறுதியளித்துள்ளது.


கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் நல்லகண்ணு, கடந்த 12 வருடங்களாக குடியிருந்த அரசு குடியிருப்பு வாடகை வீட்டை காலி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். சென்னை மாநகராட்சி அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்காக குடியிருப்பை காலி செய்யுமாறு நோட்டீஸ் கொடுத்ததால், எவ்வித எதிர்ப்பும் இன்றி வீட்டை காலி செய்து கே.கே. நகரில் குடியேறியுள்ளார். இதேபோல் காங்கிரஸ் ஆட்சியின் போது அமைச்சராக இருந்த கக்கன் குடும்பத்தினரும் வீட்டை காலி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக் கப்பட்டனர்.


மாற்று ஏற்பாடு ஏதுமின்றி முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினரை வெளியேற்றியதற்கு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவர், போராட்டமும் தியாகமுமே வாழ்க்கை முறையாகக் கொண்ட மூத்த தோழர் நல்லகண்ணு.
போற்றுதலுக்குரிய ஒரு தலைவரை உடனடியாக வெளியேற்றச் செய்த அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது.

பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற பயணத்தில் நேர்மையுடன் வாழ்கின்ற தலைவர்களுக்கும் சான்றோர்களுக்கும் அரசு தரும் மரியாதைகளில் ஒன்றாகத்தான் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஸ்டாலின் கூறியிருந்தார்.


வீடு காலி செய்தது குறித்து வேதனை தெரிவித்த நல்லகண்ணு, திடீரென காலி செய்யக் கூறியதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். எனக்குக் கூட பரவாயில்லை, முன்னாள் அமைச்சர் கக்கன் குடும்பத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என தனக் கில்லாமல் அடுத்தவர் துன்பத்திற்காக பெருந்தன்மையுடன் குரல் கொடுத்தார். இதனால் ஒரே நாளில் இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அனுதாபத்தை ஏற்படுத்திவிட்டது எனலாம்.


இந்நிலையில் நல்லகண்ணுவை, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தியுள்ளார். நல்லகண்ணு மற்றும் கக்கன் குடும்பத் தினருக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மே 23-ந் தேதிக்குப் பின் தமிழக அரசு சார்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.

You'r reading கண்டனக் குரல் எழுந்தால் தான் நியாயம் கிடைக்குமோ..? நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு மாற்று வீடு - தமிழக அரசு உறுதி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை