இந்து தீவிரவாதம் பேச்சு..! எதிர்ப்பால் முடங்கிய கமல்..! வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு

Police protection to kamal house, Bjp agitation against Hindu terrorism speech

by Nagaraj, May 14, 2019, 11:50 AM IST

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசியது பெரும் சர்ச்சையாகி விட்டது. இந்தப் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பால் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டார் கமல். சென்னையில் அவருடைய வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் நடிகர் கமல் பேசுகையில், காந்தி சிலைக்கு முன் நின்று சொல்கிறேன்.. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றார். மேலும் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரனாக, அந்தக் கொலைக்கு கேள்வி கேட்க வந்திருப்பதாக தெரிவித்தார்.சமரச இந்தியா மற்றும் சமமான இந்தியாவுக்கு எதிரான போக்கு காந்தி கொலையிலிருந்தே தொடங்குவதாக கமல் குறிப்பிட்டார்.

கமலின் இந்தப் பேச்சு இப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கமலின் பேச்சுக்கு கண்டனம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசியச் செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, கமலின் நாக்கை அறுக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் பாஜக தரப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய வேண்டும் எனவும் புகார் செய்யப் பட்டுள்ளது.

தனது பேச்சுக்கு இந்தளவுக்கு எதிர்ப்பு கிளம்பும் என கமல் எதிர்பார்த்திருக்க மாட்டார் போலும். இதனால் நேற்று 2-வது நாளாக அரவக்குறிச்சி தொகுதியில் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டு சென்னைக்கு கிளம்பி விட்டார். இன்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் நடைபெறுவதாக இருந்த பிரச்சாரத்தையும் ரத்து செய்து விட்ட கமல், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் எனக் கூறப்படுகிறது

இந்நிலையில் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் இந்துத்வா அமைப்பினர் அவருடைய வீட்டை முற்றுகையிடப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவருடைய வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதற்கிடையே நாளை திருப்பரங்குன்றம் தொகுதியில் கமல் பிரச்சாரம் செய்வார் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. திட்டமிட்டபடி நாளை பிரச்சாரத்திற்கு கமல் செல்வாரா? இந்து தீவிரவாதம் பற்றிய சர்ச்சை பேச்சால், இன்னும் என்ன மாதிரியான எதிர்ப்புகள் வரவுள்ளதோ? என்ற ஒரு வித அச்சம் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மத்தியில் நிலவி வருகிறது.

இந்து தீவிரவாதம் என்ற கமலின் பேச்சு..! பாஜக கொந்தளிப்பு...! தேர்தல் ஆணையத்திலும் புகார்

You'r reading இந்து தீவிரவாதம் பேச்சு..! எதிர்ப்பால் முடங்கிய கமல்..! வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை