இந்து தீவிரவாதி என்று பேசி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரவக்குறிச்சியில் பேசிய கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கமலின் இந்தப் பேச்சுக்கு பாஜக, அதிமுக மற்றும் இந்துத்வா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கமல் மீது வழக்குகளும் தொடுத்து வருகின்றனர்.அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய கமல், தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கக் கோரி பாஜக சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகாதது ஏன் எனக் கேள்வியெழுப்பியதுடன் மனுவை தள்ளுப்படி செய்து உத்தரவிட்டனர்.
இதற்கிடையே இதே குற்றச்சாட்டைக் கூறி, கமலுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் சரவணன் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிப்பது பற்றி தேர்தல் ஆணையத்தில் தான் புகார் கொடுக்க வேண்டும் என்று கூறி சரவணனின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.