மன்மோகனை நினைக்க வைக்கும் நரேந்திர தாமோதர் மோடி!

who is better P.M, Manmohan or modi?

May 19, 2019, 12:04 PM IST

நாட்டின் 14வது பிரதமரான நரேந்திர தாமோதர் மோடியின் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிகிறது. அவர் மீண்டும் பிரதமர் ஆவாரா அல்லது முன்னாள் பிரதமர் ஆவாரா என்பது மே 23க்கு பின்பு தெரியும். அதற்கு முன்பாக, அவரது ஐந்து ஆண்டு கால செயல்பாட்டை ஒரு கணம் திரும்பிப் பார்த்தால், பல வண்ண காஸ்ட்யூம்களில் அவர் தெரிந்தாலும், பக்கத்திலேயே தலைப்பாகை, புன்சிரிப்பு சகிதம் மன்மோகன் சிங் தெரிகிறார். ஏன் தெரியுமா?


இதற்கு ஒரு கதையை நினைவு கூற வேண்டியிருக்கிறது. ஒரு ராஜா தனது மக்களை அதிக வரி போட்டு மிகவும் துன்புறுத்தினாராம். கடைசி காலத்தில் அவர் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த போது தன் மகனை அழைத்து, ‘‘மகனே, மக்கள் என்னை கெட்டவன் என்று வெறுக்கிறார்கள். இப்போதுதான் அதை உணர்கிறேன். அது எனக்கு வேதனையாக இருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த மகன், ‘‘கவலைப்படாதீர்கள், மக்கள் விரைவில், உங்களை நல்லவர் என்று சொல்லுவார்கள்’’ என்று பதில் கூறினானாம். அதற்கு பிறகு, மகன் ராஜாவாகி, மக்களை இன்னும் கொடுமைப்படுத்தி, கொடுங்கோல் ஆட்சி புரிந்துள்ளான். அப்போது மக்கள், ‘‘இவனை விட இவனது தந்தையே மேல்... அவர் நல்லவர்...’’ என்று சொன்னார்களாம்.
இப்படித்தான், மன்மோகனை சொல்ல வைத்து விட்டார் மோடி. அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று காற்றிலிருந்து கனிமம் வரை ஊழல்களால் ஐ.மு. கூட்டணி அரசு திளைத்த போது கடும் கோபம் கொண்ட நாம், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை 45 இடங்களுக்குள் சுருட்டி தூக்கியெறிந்தோம். ஆனால், இன்று என்ன நிலை? அந்த மன்மோகனை பாராட்டி பல மீம்ஸ்கள்...
மோடி 2014ல் ஆட்சிக்கு வந்ததுமே பத்திரிகையாளர்களை ஒதுக்கினார். முதன்முதலில் வெளிநாட்டு பயணமாக பூட்டான், பிரேசில் நாடுகளுக்கு சென்ற போது நான்கு செய்தியாளர்களை மட்டுமே அழைத்து சென்றார். அவர்கள் வானொலி, தூர்தர்ஷன் என்று அரசு கட்டுப்பாட்டில் உள்ள மீடியாக்களை சேர்ந்தவர்கள். அரசுக்கு எதிராக துளி கூட விமர்சிக்க மாட்டார்கள். ஆனால், அதற்கு முன் மன்மோகன்சிங் காலம் வரை பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கு என்றே ஏர் இந்தியாவில் ஒரு தனி விமானம் தயாராக இருக்கும். அதில் 34 பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் கொண்ட தனிப்பிரிவே செய்தியாளர்களுக்காக இருக்கும். அதில் 2 இடங்களில் பிரதமரின் எஸ்.பி.ஜி. அதிகாரிகள் இருப்பார்கள். மீதி 32 இருக்கைகளும் செய்தியாளர்களுக்குத்தான். அவர்களுக்கு வெளிநாடுகளில் எந்த ஓட்டல்களில் தங்க வைப்பது என்பது பற்றியெல்லாம் வெளியுறவுத் துறை முடிவெடுக்கும். ஆனால், அதற்கு அந்தந்த மீடியா நிறுவனங்கள்தான் பணம் செலுத்தும். மன்மோகன் வரை முந்தைய பிரதமர்கள் எல்லாம் விமானத்திலேயே செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பார்கள். பல்வேறு எதிர்மறையான கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிப்பார்கள். சில சமயங்களில் அந்த செய்திகள், அந்த பயணம் முடிவடைவதற்கு முன்பே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும்.
மோடி பொறுப்பேற்றதுமே செய்தியாளர்களை ஓரங்கட்டி, தன்னை பாசிட்டிவ்வாக மட்டுமே படம் பிடித்து காட்டும் வகையில் ஏற்பாடுகளை செய்து கொண்டார். அது மட்டுமல்ல. ஐந்தாண்டுகளில் அவர் ஒரு முறை கூட முழு செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியதே இல்லை. சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்த போது பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் அவர் அமித்ஷாவுடன் இணைந்து பேட்டி அளித்த போது கூட ஒரு கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. மோடி பேட்டிக்கு வந்தார் என்பதே தனிச் செய்தியாகி, அந்நிகழ்வை விமர்சித்து ஏராளமான மீம்ஸ்களும் வந்து விட்டன.
ஆனால், மன்மோகனிடம் எந்த கேள்வி கேட்டாலும் சிரித்து கொண்டே பதிலளிப்பார். ‘நீங்கள் பொம்மை பிரதமராக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனவே?’ என்று கேட்டால் கூட கோபப்பட்டதில்லை. மழுப்பலாக பதில் அளிப்பதில் வல்லவர். அதே சமயம், ஊழல் குற்றச்சாட்டுகள் கடுமையாக எழுந்த காலத்தில் ஒருமுறை அவர், ‘‘கூட்டணி நிர்ப்பந்தங்களால் என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை’’ என்று துணிச்சலாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெடித்த போது மன்மோகன் ஆட்சிக்காலத்திலேயே நாடாளுமன்றக் கூட்டு குழு விசாரணைக்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. சி.பி.ஐ. விசாரணை நடந்தது. ஆ.ராஜா பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரும், கனிமொழி எம்.பி.யும் கைது செய்யப்பட்டார்கள். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராஜாவை தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் கடிதம் மூலம் எச்சரித்தார் என்பது வெளிப்படையாக தெரிய வந்தது.
ஆனால், இப்போது ரபேல் போர் விமானம் வாங்கியதில், பிரான்ஸ் நிறுவனத்துடன் கொள்முதல் ஒப்பந்தம் பேசுவதற்கு என்றே பாதுகாப்பு அமைச்சகத்தில் ஒரு கமிட்டி இருந்தும், பிரதமர் அலுவலகம் அந்த கமிட்டியை மீறி தனியாக பேரம் நடத்தியது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. இதற்கான ஆவணங்களை இந்து பத்திரிகை ஆசிரியர் என்.ராம் வெளிக்கொண்டு வந்தார். அது மட்டுமல்ல. பொதுத் துறை நிறுவனத்திடம் இருந்து அனில் அம்பானி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் சென்றதும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
இது போன்ற சூழலில், பிரதமர் மோடி எந்த விசாரணைக்கும் உத்தரவிட விட்டாலும் பரவாயில்லை. நாடாளுமன்றத்திற்கு வந்து விளக்கம் கொடுத்திருக்கலாம். ஆனால், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்தான் நாடாளுமன்றத்தில் பதிலளித்தார். அவரும் தான் எழுப்பிய எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இப்போது வரை கூறுகிறார். எனவே, தனது அரசு நேர்மையான அரசு என்று மோடி சொல்லிக் கொள்வதைக் கூட பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளவில்லை. தன்னைச் சுற்றியுள்ள சில அமைச்சர்களும், ஜால்ரா அடிக்கும் கட்சியினரும் நேர்மையானவர், வல்லவர் என்று பாராட்டினாலேயே அதை அப்படியே மக்கள் நம்புவார்கள் என்பது அபத்தமானது.
அதே போல், காங்கிரஸ் காலத்திலும் சி.பி.ஐ, வருமானவரித் துறை போன்றவற்றை கொண்டு, எதிர்க்கட்சிகளை மிரட்டினார்கள்.
இப்போதும் அது நடக்கிறது. இன்னும் சொல்லப் போனால், அந்த மிரட்டல் பல மடங்கு அதிகரித்து விட்டதாகவே எல்லோரும் நினைக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு விஷயமாக எடுத்து ஒப்பிட்டு கொண்டே செல்லலாம். ஆக மொத்தத்தில், காங்கிரஸ் காலத்தில் என்னவெல்லாம் மக்களை வெறுப்பேற்றியதோ, அதெல்லாமே மோடி ஆட்சியிலும் இருந்துள்ளது. அதே சமயம், மோடியை விட வெளிப்படைத்தன்மையிலும், கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் பக்குவத்திலும், பொருளாதார அனுபவத்திலும் நிச்சயமாக மன்மோகன் உயர்ந்தே தெரிகிறார்.

You'r reading மன்மோகனை நினைக்க வைக்கும் நரேந்திர தாமோதர் மோடி! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை