தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை பாஜகவுக்கு சாதகமாகவே வெளிவந்துள்ள நிலையில், இந்தக் கணிப்புகளை நம்ப வேண்டாம். முன்னரே இப்படி ஒரு கணிப்புகளை வெளியிடச் செய்து வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற திட்டமிட்டுள்ளது பாஜக என்று மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை செய்துள்ளார்.
7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த சில நிமிடங்களில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு தொலைக்காட்சிகளும், நிறுவனங்களும் வெளியிட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டன. இந்தக் கருத்துக் கணிப்பில் பெரும்பாலானவை சொல்லி வைத்தாற்போல் பாஜக தனிப் பெரும் மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளன. இந்தக் கருத்துக் கணிப்புகளில் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை இருக்கும் என்ற சந்தேகம் இருந்தாலும், எதிர்க் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்றே கூறலாம்.
இந்த நிலையில் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியோ இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின் பின்னணியில் பெரும் சதித் திட்டம் இருப்பதாக எச்சரிக்கை மணி அடித்துள்ளார். அவருடைய டிவிட்டர் பதிவில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம். வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லு முல்லு செய்யவோ அல்லது எந்திரங்களையே மாற்றவோ ஒரு சதித் திட்டம் வைத்து இந்த கருத்துக் கணிப்பு விளையாட்டை நடத்துகின்றனர். இதனால் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாகவும், தீரத்துடனும் செயல்பட்டு பாஜகவுக்கு எதிரான இந்தப் போரை எதிர்கொள்ள வேண்டும் என்று மம்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.