ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் முயற்சியால் இன்று டெல்லி செல்லும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலை அக் கட்சி மறுத்துள்ளது. டெல்லியில் யாரையும் சந்திப்பது மற்றும் எந்த நிகழ்ச்சியிலும் மாயாவதி பங்கேற்கவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியில் பாஜக அல்லாத ஆட்சியமைக்கும் முயற்சிகளில் ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த சில நாட்களாக சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளார். முதலில் 21-ந் தேதி (நாளை) டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உ.பி.யில் கூட்டணி அமைத்துள்ள பகுஜன் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் சம்மதிக்கவில்லை.
பிரதமர் கனவில் இருந்த மாயாவதியும், மம்தாவும் தேர்தல் முடிவுகள் வரட்டும், அதன் பின் பார்க்கலாம் என்று கூறி விட்டதால் இந்தக் கூட்டம் நடைபெறுவது சந்தேகமாகி விட்டது.
இதன் பின்னர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23-ந் தேதி டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்து கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கூட்டத்திலாவது அனைவரையும் ஒன்று சேர்த்து விட வேண்டும் என சந்திரபாபு நாயுடு மீண்டும் களத்தில் சுறுசுறுப்பானார்.சரத் பவார், சரத்யாதவ், அரவிர்ந் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா என பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்த நாயுடு, உ.பி.க்கும் பறந்தார்.
உ.பி.யில் மாயாவதியையும், அகிலேஷையும் சந்தித்து விட்டு நேற்று டெல்லி திரும்பிய நாயுடு, ராகுல் காந்தியையும், சோனியாவையும் அடுத்தடுத்து சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் சந்திரபாபுவின் முயற்சியின் பலனாக, மாயாவதி இன்று டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்திக்க உள்ளார் என்று நேற்று தகவல்கள் வெளியானது.
ஆனால் டெல்லியில் மாயாவதி இன்று யாரையும் சந்திக்கப் போவதில்லை, எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவும் இல்லை என்று பகுஜன் கட்சியின் நிர்வாகியான எஸ்.சி.மிஸ்ரா அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். மாயாவதியின் இந்த திடீர் மனமாற்றத்திற்குக் காரணம், நேற்று மாலை வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தான் என்று கூறப்படுகிறது. ஒட்டு மொத்தமாக அனைத்துக் கருத் இக்கணிப்புகளுமே பாஜகவுக்கு சாதகமாக வெளியாகி, எதிர்க்கட்சிகளுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது.
ஆனாலும் இந்தக் கணிப்புகள் எல்லாம் பொய்யாகிவிடும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெரும் நம்பிக்கையில் மே 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நாளை எதிர்நோக்கியுள்ளனர்.