சரியாக ஓராண்டுக்கு பின்பு மீண்டும் மே 23ம் தேதி டெல்லியில் கூடுகிறார்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள். ஆம்! கடந்த ஆண்டு இதே மே 23ம் தேதி அன்று தான் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் அத்தனையும் ஓரணியாக திரண்டன. அது, மதசார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவரான குமாரசாமி, முதல்வராக பதவியேற்ற நாள்.
கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. 104 இடங்களை பிடித்து முதலிடம் பெற்றாலும் அதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் 80 இடங்களுடன் 2வது இடமும், வெறும் 38 இடங்களை கைப்பற்றிய மதசார்பற்ற ஜனதாதளம் 3வது இடமும் பிடித்தன. எப்படியும் குமாரசாமி ஆதரவு தருவார் என்ற நம்பிக்கையில் எடியூரப்பா முதல்வராகும் ஆசையில் திளைத்திருக்க நடந்ததோ வேறு.
அதற்கு முன்பு நடந்த கோவா, மேகாலயா, மணிப்பூர் மாநில தேர்தல்களில் பா.ஜ.க.வை விட காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியிருந்தாலும், இதர கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை வளைத்து பா.ஜ.க.வே ஆட்சியமைத்தது. தனிப்பெரும் கட்சியாக வென்ற தங்களுக்கு கவர்னர் வாய்ப்பு தராதது அரசியல் சட்டவிரோதம் என்று காங்கிரஸ் கொதித்தது. அதை பா.ஜ.க. பொருட்படுத்தவில்லை. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சோனியா காந்தி, கர்நாடக தேர்தலில் அதிரடி ஆட்டம் ஆடினார்.
மூன்றாவது கட்சியாக வந்த குமாரசாமிக்கே முதல்வர் பதவியை விட்டு கொடுத்து, பா.ஜ.க.வின் வாய்ப்பை தட்டிப் பறித்தார். இதை பா.ஜ.க. கொஞ்சம் எதிர்பார்க்கவில்லை. என்னென்னவோ செய்தும் இன்று வரை காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை எடியூரப்பாவால் பிரிக்கவே முடியவில்லை.
இது ஒருபுறமிருக்க, குமாரசாமி கடந்த ஆண்டு மே 23ம் தேதி கர்நாடக முதல்வராக பதவியேற்ற போது பா.ஜ.க.வுக்கு வெறுப்பேற்றும் வகையில் அத்தனை எதிர்க்கட்சித் தலைவர்களும் அங்கு படையெடுத்து வந்தனர். சோனியா, ராகுல், பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணாமுல் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ஆம்ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், தெலுங்குதேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் யெச்சூரி என்று எல்லோரும் கைகோர்த்து நின்றனர்.
இப்போது சரியாக ஓராண்டு முடிந்து அதே மே 23ல் டெல்லியில் இந்த தலைவர்கள் மீண்டும் கூடப் போகிறார்கள். மோடி பிரசாரத்தில் தீவிரமாக கவனம் செலுத்திக் கொண்டிருக்க, சோனியாவே அடுத்தகட்டத்திற்கு சென்றுவிட்டார். பா.ஜ.க.வின் மறைமுக கூட்டாளி என்று சொல்லப்படும் டி.ஆர்.எஸ். கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் உள்பட எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். ‘‘மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளே டெல்லிக்கு வாருங்கள், அன்றே எல்லோரும் சேர்ந்து பிரதமரை தேர்வு செய்வோம். பா.ஜ.க.வுக்கு எந்த வாய்ப்பும் தர வேண்டாம்’’ என்று கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல. திரிணாமுல், பகுஜன்சமாஜ், தெலுங்குதேசம் என்று எல்லா எதிர்க்கட்சிகளையும் பா.ஜ.க. பக்கமே போக விடாமல் செய்ததில் காங்கிரஸ் முதல் வெற்றி பெற்று விட்டது. காரணம், காங்கிரஸ் பக்கம் யாருமே போக விடக் கூடாது என்று பா,ஜ.க. தான் முதலில் தீவிரமாக முயன்று வந்தது. ஆனால், நிலைமை தலைகீழாகி விட்டது.
தேர்தல் முடிவுக்கு பின்பும், மம்தா, மாயாவதி, சந்திரபாபு நாயுடு, கெஜ்ரிவால், ஸ்டாலின் ஆகியோர் பா.ஜ.க. போவதற்கான வாய்ப்புகளே இல்லை. காங்கிரஸ் 150 இடங்களை பிடிக்கும். உ.பி.யில் பகுஜன்சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணி 40 முதல் 50 இடங்களை பிடிக்கலாம். தி.மு.க., தெலுங்குதேசம், திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் சேர்ந்து 50, 60 இடங்களை பிடிக்கலாம் என்று சோனியா கணக்கு போடுகிறார். அதே சமயம், ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவதற்கு மம்தா, மாயாவதி, அகிலேஷ், சரத்பவார் ஆகியோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அப்போது, மன்மோகன்சிங் அல்லது ப.சிதம்பரம் போன்று வேறொரு காங்கிரஸ் தலைவரை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தலாம். பகுஜன்-சமாஜ்வாடி கூட்டணி அதிக இடங்களை பிடித்திருந்தால், மாயாவதிக்கு துணை பிரதமர் பதவி தருவது என்றும் அதை ஏற்காவிட்டால், மாயாவதியை பிரதமர் ஆக்கலாம் என்றும் சோனியா காந்தி நினைக்கிறார்.
இதற்காக, சோனியா இப்போதே மாயாவதியுடன் ரகசிய தொடர்பில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த இருவருமே ஒப்புக்கு சண்டை போட்டு கொண்டு நடிக்கிறார்கள் என்பதை கடந்த ஆண்டு பெங்களூருவில் இவர்கள் காட்டிய நெருக்கத்தில் இருந்தே அறியலாம். அதற்கு முன்பு, காங்கிரசை மாயாவதி கடுமையாக விமர்சித்தார். காரணம், காங்கிரஸ், பகுஜன், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் மெகா கூட்டணி அமைத்தால், உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளையும் கைப்பற்றி விடும் என்று பத்திரிகைகள் கருத்து கணிப்பு வெளியிட்டன. அப்போது மாயாவதி, அகிலேஷூக்கு மத்திய பா.ஜ.க. அரசு பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்தது. சி.பி.ஐ, வருமானவரித்துறை என்று நெருக்கடி கொடுத்து, காங்கிரசுடன் மெகா கூட்டணி அமைக்கக் கூடாது என்பதை மறைமுகமாக உணர்த்தியது.
ஆனாலும், மாயாவதியும், அகிலேஷூம் கைகோர்த்தனர். மாயாவதி பிரதமராக அகிலேஷ் உதவ வேண்டும், அகிலேஷ் உ.பி. முதல்வராக மாயாவதி கைகொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் உடன்பாடு. அதே சமயம், காங்கிரசை கூட்டணியில் சேர்க்கவில்லை. மாறாக, இருவரும் காங்கிரசை வசைபாடினார்கள். உண்மையில் அது பா.ஜ.க.வை ஏமாற்றுவதற்கான நடிப்புதான். ஏனென்றால், மத்தியப் பிரதேசத்தில் குணா தொகுதியில் மாயாவதி நிறுத்தி பகுஜன் வேட்பாளர் லோகேந்திர சிங், திடீரென காங்கிரஸ் வேட்பாளர் சிந்தியாவுக்கு ஆதரவாக மாறினார். அப்போது, மாயாவதி ஒப்புக்கு ட்விட்டரில் மட்டும் காங்கிரசுக்கு கண்டனம் தெரிவித்தார். கமல்நாத் ஆட்சிக்கு ஆதரவை விலக்கிக் கொள்ளவே இல்லை.
அதே போல், இப்போது வாரணாசியில் மாயாவதியும், அகிலேஷூம் பிரச்சாரம் செய்த போது கூட காங்கிரசை விமர்சித்தார்கள். அதே சமயம், அமேதி, ரேபரேலி தொகுதிகளில் சோனியாவுக்கும், ராகுலுக்கும் வாக்களிக்குமாறு தனது தொண்டர்களுக்கு மாயாவதி பகிரங்கமாகக் கேட்டு கொண்டார். அதே போல், பிரியங்கா காந்தி சமீபத்தில் பேட்டியளிக்கும் போது, ‘‘பகுஜன்-சமாஜ்வாடி கூட்டணி வெற்றி பெறும் வகையில்தான் பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது’’ என்று வெளிப்படையாக சொன்னார். அதாவது, பா.ஜ.க.வின் இந்துத்துவா வாக்கு வங்கியை பிரிக்கும் வகையில் வேட்பாளர்களை காங்கிரஸ் நிறுத்தியிருக்கிறது.
ஆக மொத்தத்தில், பா.ஜ.க.வுக்கு 272+ கிடைக்காவிட்டால், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் கூட அந்த கட்சியால் ஆட்சி அமைக்க முடியாத நிலையை சோனியா உருவாக்கியிருக்கிறார். இதை மோடி-அமித்ஷா கூட்டணி எப்படி மாற்றப் போகிறது? பா.ஜ.க.வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்குமா? என்பது மே 23 மாலையில் தெரிந்து விடும்!