நேரு, இந்திராவுக்கு பின்பு, நாட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அபார சாதனை புரிந்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவகர்லால் நேரு பதவியேற்றார். அவர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, 1952, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதற்கு பின், நேருவின் மகள் இந்திராகாந்தி 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த பொதுத்தேர்தல்களில் அறுதிப் பெரும்பான்மை பெற்று தொடர்ந்து ஆட்சியில் நீடித்தார்.
கடந்த 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று தொடர்ந்து 10 ஆட்சியில் நீடித்தாலும், கூட்டணி பலத்தில்தான் மன்மோகன்சி்ங் பிரதமராக நீடித்தார்.
அதே போல், காங்கிரஸ் அல்லாத பிரதமர்களில் மெரார்ஜிதேசாய், சரண்சிங், தேவகவுடா, குஜ்ரால், வி.பி.சிங் போன்றவர்கள் 5 ஆண்டுகள் கூட முழுமையாக ஆட்சி செய்ய முடியாமல் போனார்கள்.
கடந்த 1996ல் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போது வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றார். ஆனால், அவரால் பெரும்பான்மை ஆதரவு திரட்ட முடியாமல் வெறும் 13 நாட்களே ஆட்சியில் இருந்தார். மீண்டும் 1998ம் ஆண்டு பிரதமர் ஆன போதும் 13 மாதங்களே ஆட்சியில் நீடித்தார். அதன்பிறகு, 1999 முதல் 2004ம் ஆண்டு வரை மீண்டும் பிரதமராக பதவி வகித்தார்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு தேர்தலிலும் சரி, இப்போதும் சரி. தனிப்பட்ட பா.ஜ.க.வுக்கே அறுதிப் பெரும்பான்மை பெற்று கொடுத்து ஆட்சியமைத்திருக்கிறார். இதன்மூலம், புதிய வரலாறு படைத்திருக்கிறார் நரேந்திர மோடி!