கட்சி ஆரம்பித்த 16 மாத காலத்தில், சந்தித்த முதல் தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே வாக்குகளை மக்கள் வாரி வழங்கியுள்ளனர். நல்ல வழியில் பயணத்தை தொடர்வோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உற்சாகமாக தெரிவித்துள்ளார்.
புதிதாக கட்சியை ஆரம்பித்து, புதுமையான பாணியில் அரசியல் களம் புகுந்த நடிகர் கமல், மக்களவை மற்றும் 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் கெத்தாக தனித்தே களமிறங்கினார் கமல். அரசியலில் ஜொலிப்பாரா? மாட்டாரா? என்ற கேள்விகள் எழ, தன் பாணியில், தமிழகம் முழுவதும் விறுவிறுவென பிரச்சாரம் மேற்கொண்டார்.வேட்பாளர்களையும் படித்தவர்கள், கை சுத்தமானவர்கள், பொது வாழ்வில் உள்ளவர்கள் என பார்த்துப் பார்த்து களத்தில் இறக்கினார் கமல்.
முதலில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கமல் தீவிரம் காட்டினார். அடுத்து நடந்த 4 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், அரவக்குறிச்சியில் இந்து தீவிரவாதி என கமல் பேசியது சர்ச்சையாகி விட்டது. கமலின் இப்பேச்சு, பிரதமர் மோடி வரை விளக்கம் கூறும் அளவுக்கு சர்ச்சையாகி, கமலுக்கு பெரும் விளம்ப்ரம் தேடிக் கொடுத்து விட்டது எனலாம்.
இந்நிலையில் தற்போது வெளியான தேர்தல் முடிவுகளும் கமலை உற்றுப் பார்க்க வைத்துள்ளது. பல தொகுதிகளில் வட்சத்தை தாண்டி 10% அளவுக்கு மக்கள் நீதி மய்யம் வாக்குகளை அள்ளி 3-ம் இடத்தை பிடித்துள்ளது. நகர்ப்புற , படித்த மற்றும் இளைஞர்கள் பலரின் வாக்குகளை கமல் கவர்ந்து, தனி சக்தியாக உருவெடுப்பார் என்றே இந்த வாக்குகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து தன் கட்சி நிர்வாகிகளுடன் உற்சாகமாக கமல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர், வாக்களித்த மக்களுக்கு நன்றி. மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், தொடர்ந்து செயலாற்றுவோம். நல்ல வழியில் தான் நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம்.
14 மாதத்தில் எங்களால் என்ன முடியுமோ, அதை செய்துள்ளோம். தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை என்று கமல் கூறினார்.
மத்தியில் மீண்டும் மோடி பிரதமராவது குறித்து கமல் கூறுகையில், பாஜக வெற்றி என்பது தமிழக மக்கள் கொடுத்தது அல்ல. ஆனால் தமிழகத்தையும் பிற மாநிலங்களைப் போலவே பாஜகவும், பிரதமர் மோடியும் கருத வேண்டும் என கமல் குறிப்பிட்டார்.