திமுக மக்களவைக் குழுத் தலைவராக டி.ஆர்.பாலுவும், மாநிலங்களவைத் தலைவராக திருச்சி சிவாவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக சார்பில் 19 பேரும், திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் பாரிவேந்தர், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சின்ராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், மதிமுகவின் கணேசமூர்த்தி ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற எம்.பி.க்கள் கூட்டம் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடை பெற்றது.
இந்தக் கூட்டத்தில் மக்களவைத் திமுக குழுத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் டி. ஆர்.பாலு ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
துணைத் தலைவராக கனிமொழியும்,
கொறடாவாக ஆ. ராசாவும்,
பொருளாளராக எஸ். எஸ். பழனிமாணிக்கம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.இந்தக் கூட்டத்தில் திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவராக திருச்சி சிவாவும்
கொறடாவாக டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட பலரும் பங்கேற்றனர்.கூட்டத்தில் மக்களே எஜமானர்கள், மக்களே மகேசர்கள் என்பதை மறவாமல் நாள்தோறும் மக்கள் பணியாற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.