பிரியங்காவை இழுக்காதீர்கள்! ராகுல்காந்தி திடீர் கோபம்!

Dont drag my sister, Rahul warns senior leaders in cwc

May 26, 2019, 09:57 AM IST

‘‘காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக பிரியங்கா காந்தியை கொண்டு வரலாம் என்று செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை கூறிய போது, அதை கேட்டு ஆவேசமடைந்தார் ராகுல்காந்தி.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 302 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி(செயற்குழு) கூடி விவாதித்தது. இந்த கூட்டத்தில் சோனியாகாந்தி, கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். தேர்தலுக்கு முன்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தியும் பங்கேற்றார்.
கூட்டத்தில் ராகுல்காந்தி பேசும் போது, தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை விட்டு விலகுவதாக கூறியதாகவும், அதை மூத்த நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால், இதை காங்கிரஸ் தலைவர்கள் மறுத்தனர். கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ரன்தீப் சுர்ஜிவாலா, ‘‘இந்த இக்கட்டான தருணத்தில் கட்சிக்கான சவால்களை சந்திக்க ராகுல்காந்தியின் தலைமை கட்டாயம் தேவை என்று எல்லோரும் ஒருமித்த குரலில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது இன்னொரு தகவல் கசிந்துள்ளது. ராகுல்காந்தி பேசும் போது கட்சித் தலைவர் பதவியை விட்டு விலகுவதாகவும், வேறொருவர் பதவியை ஏற்குமாறும் கூறியிருக்கிறார். அதற்கு ஒரு மூத்த தலைவர், தலைவராக பிரியங்கா காந்தியை கொண்டு வரலாம் என்று கருத்து சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டதும் ராகுல்காந்திக்கு கோபம் வந்து, ‘‘எனது சகோதரியை தேவையில்லாமல் இழுக்காதீர்கள். நான் சொல்வது, எங்கள் குடும்பத்தில் இருந்துதான் தலைவர் வர வேண்டும் என்று அல்ல. வேறொருவர் இந்த கட்சியை வழிநடத்த வேண்டும் என்றுதான் நான் கேட்கிறேன்’’ என்று பதிலளித்துள்ளார். அதற்கு பிறகு, மூத்த தலைவர்கள் பலரும், ‘‘நீங்களே தலைவர் பதவியில் இருப்பதுதான் நல்லது. இல்லாவிட்டால் தொண்டர்கள் மனம் நொந்து விடுவார்கள்’’ என்று கூறி அவரை சமாதானப்படுத்தியுள்ளனர்.

You'r reading பிரியங்காவை இழுக்காதீர்கள்! ராகுல்காந்தி திடீர் கோபம்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை