ராஜீவ், அடல்ஜி வெற்றி பெற்ற போது யாருக்கும் சந்தேகம் வரவில்லையே! மம்தா பானர்ஜி கேள்வி!

People are scared to speak about the doubts in bjp victory. but I am not : Mamata Banerjee

May 26, 2019, 09:46 AM IST

‘‘ராஜீவ்காந்தி 400 இடங்களில் வெற்றி பெற்ற போது மக்களுக்கு சந்தேகம் ஏற்படவில்லை. அடல்ஜி வெற்றி பெற்ற போது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. ஆனால், இப்போது பா.ஜ.க. வெற்றியை யாராலும் ஏற்று கொள்ள முடியவில்லையே!’’ என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் 22 தொகுதிகளிலும், பா.ஜ.க. 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் அந்த மாநிலத்தில் பா.ஜ.க. கட்சி இருப்பதே தெரியாமல் இருந்தது. ஆனால், இப்போது பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பல முறை அங்கு சென்று பிரச்சாரம் செய்தனர். மேலும், கம்யூனிஸ்ட் வாக்குவங்கியை தங்கள் பக்கம் இழுத்தனர். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.


வெற்றியை கொண்டாடி வரும் அம்மாநில பா.ஜ.க. கட்சியினர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நூறு பேர் வரை தங்கள் கட்சிக்கு மாறத் தயாராக இருப்பதாக கூறி வருகிறார்கள். ஏற்கனவே, பிரதமர் மோடியே தனது பிரச்சாரத்தின் போது, இதை வெளிப்படையாக தெரிவித்தார். இந்த சூழ்நிலையில், தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய மம்தா பானர்ஜி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:


கட்சியின் வெற்றி குறைந்ததற்கு பொறுப்பேற்று நான் முதலமைச்சர் பதவியை விட்டு விலகுவதாக தெரிவித்தேன். அதை எனது கட்சி நிர்வாகிகள் ஏற்கவில்லை. அவர்களை சமாதானப்படுத்தி, விலகி விட முயன்றேன். ஏற்கனவே மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவள் நான். எனவே, எனக்கு முதலமைச்சர் நாற்காலி தேவையில்லை. ஆனால், அந்த நாற்காலியில் நான் இருக்க வேண்டியிருக்கிறது.


கடந்த 6 மாதங்களாக நான் முதலமைச்சர் பதவியில் எந்த அதிகாரமும் இல்லாமல் இருக்கிறேன். காரணம், தேர்தல் கமிஷன் எல்லா அதிகாரத்தையும் எடுத்து கொண்டது. இப்போது பா.ஜ.க.வினர் எப்படியாவது குறுக்கு வழியில் இங்கு ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள். அப்படி என்ன அவசரம்? ஏன் இந்த பதவி ஆசை? ஆட்சியை கவிழ்ப்பார்களாம்! அது என்ன அவ்வளவு ஈசியா? முடிந்தால் செய்து பாருங்கள்!
மேற்கு வங்கத்தில் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்கிறார்கள். நானே இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. நாடு முழுவதும் எப்படி தேர்தல் நடந்தது? ராஜீவ்காந்தி 400 தொகுதிகளில் வெற்றி பெற்ற போது யாருக்குமே எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. அடல்ஜி வெற்றி பெற்ற போது யாருக்குமே சந்தேகம் வரவில்லை. ஆனால், இப்போது பா.ஜ.க.வின் வெற்றி எல்லோருக்குமே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான், குஜராத், ஹரியானாவில் எல்லா தொகுதிகளிலும் பா.ஜ.க.வே வெற்றி பெற்றிருக்கிறது. இது எப்படி? மக்கள் இதைப் பற்றி பேசுவதற்கு பயப்படுகிறார்கள். ஆனால், எனக்கு எந்த பயமும் இல்லை.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
பா.ஜ.க.வின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அனைவருமே வாயடைத்து போய் விட்டனர். ஆனால், மாயாவதியும், மம்தா பானர்ஜியும் இன்னும் ஆவேசமாகவே இருக்கிறார்கள். பா.ஜ.க. முறைகேடாக வெற்றி பெற்றிருப்பதாக துணிவுடன் கூறி வருகிறார்கள்.

You'r reading ராஜீவ், அடல்ஜி வெற்றி பெற்ற போது யாருக்கும் சந்தேகம் வரவில்லையே! மம்தா பானர்ஜி கேள்வி! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை