வரும் 30-ந் தேதி மாலை 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றே புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.
17-வது மக்களவைக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கிறது. டெல்லியில் நேற்று நடைபெற்ற புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமராக மோடி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். மோடியின் பெயரை பாஜக தலைவர் அமித் ஷா முன்மொழிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் வழிமொழிந்தனர்.
இதைத் தொடர்ந்து பிரதமராக தாம் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்துடன் குயரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சர்தித்த மோடி, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.இதையடுத்து ஆட்சியமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் வரும் 30-ந் தேதி இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியுடன் புதிய அமைச்சர்களும் அன்றைய தினமே பதவியேற்க உள்ளனர். பாஜக தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தாலும், அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு தர பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் அதிமுக ஒரே ஒரு எம்.பி.யுடன் டெல்லியில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், அக்கட்சிக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா? என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.