300 பிளஸ் என்று நான் சொன்னதை நம்பவில்லை அகமதாபாத்தில் மோடி பேச்சு!

Had Said Its 300-Plus For Us Says PM In Ahmedabad Meets His Mother

by எஸ். எம். கணபதி, May 27, 2019, 08:54 AM IST

ஐந்து கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும், பா.ஜ.க.வுக்கு ‘300 பிளஸ்’ என்று நான் சொன்னதை பலரும் கிண்டல் செய்தார்கள். ஆனால், பா.ஜ.க. அரசுக்கு ஆதரவான அலையே இந்த தேர்தலில் வீசியது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. மோடி மீண்டும் பிரதமராக வரும் 30ம் தேதி இரவு பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில், அவர் குஜராத் மாநிலத்திற்கு சென்றார். அகமதாபாத் விமான நிலையம் அருகே உள்ள வல்லபபாய் படேல் சிலைக்கு அவர் மாலை அணிவித்தார். அதன்பின், கட்சித் தலைவர் அமித்ஷா, முதலமைச்சர் விஜய் ரூபானி ஆகியோருடன் கட்சி அலுவலகத்திற்கு சென்றார். அதைத் தொடர்ந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

சூரத்தில் நடந்த தீ விபத்து மிகவும் வேதனையை தந்துள்ளது. இறந்த மாணவர்களின் குடும்பங்களின் கவலையில் பங்கேற்று கொள்கிறோம். என்னை முதன்முதலில் தேர்வு செய்த இந்த மாநிலத்து மக்களை தரிசனம் செய்வதற்காக வந்துள்ளேன்.
தேர்தலின் போது 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்ததுமே நான், பா.ஜ.க.வுக்கு ‘300பிளஸ்’ கிடைக்கும் என்று கூறினேன். மக்கள் பலரும் கிண்டல் செய்தார்கள். ஆனால், தேர்தல் முடிவுகள் அப்படித்தான் வந்துள்ளது. மக்கள் உறுதியான அரசை விரும்புகிறார்கள். தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு ஆதரவான அலையே வீசியது.

இப்போது அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அதிக பொறுப்புகள் உள்ளன. சாதாரண மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம்,

இவ்வாறு மோடி பேசினார்.

பின்னர், அவர் காந்திநகரில் உள்ள தனது தாயார் வசிக்கும் வீட்டிற்கு சென்றார். அங்கு தாயார் ஹீராபென்னிடம் ஆசி பெற்றார். அதைத் தொடர்ந்து, அவர் ராஜ்பவனுக்கு சென்று தங்கினார். இன்று(மே27) அவர் தனது வாரணாசி தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவுள்ளார்.

You'r reading 300 பிளஸ் என்று நான் சொன்னதை நம்பவில்லை அகமதாபாத்தில் மோடி பேச்சு! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை