அமேதியை அடுத்து மே.வங்கத்தில் பா.ஜ.க. தொண்டர் சுட்டுக்கொலை

BJP worker shot dead in West Bengal, security stepped up

by எஸ். எம். கணபதி, May 27, 2019, 16:00 PM IST

அமேதியைத் தொடர்ந்து மேற்குவங்கத்தில் பா.ஜ.க. தொண்டர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மட்டுமே 303 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்ததும், மோடி அலை வீசியதும் பா.ஜ.க. வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

அந்த தேர்தலிலேயே பா.ஜ.க. 282 இடங்களில்தான் வென்றிருந்தது. ஆனால், தற்போது பல மாநிலங்களில் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசியும், கடந்த முறையை விட மிக அதிகமாக 303 தொகுதிகளில் பா.ஜ.க. வென்றுள்ளது. தேர்தலில் முறைகேடு செய்துதான் பா.ஜ.க. இந்த வெற்றியை அடைந்துள்ளது என்று மாயாவதி, மம்தா பானர்ஜி ஆகியோர் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே, ராகுல்காந்தி தோற்ற அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக பணியாற்றிய பா.ஜ.க. தொண்டர் சுரேந்திர சிங்(51) என்பவர் கடந்த சனிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது இறுதி ஊர்வலத்தில் ஸ்மிருதி இரானி பங்கேற்றார். இந்த கொலை தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், ஞாயிறன்று இரவில் மேற்கு வங்கத்தில் ஒரு பா.ஜ.க. தொண்டர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அம்மாநிலத்தில் தேர்தலின் போதே ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே பயங்கரச் சண்டை நடந்து வந்தது. பல இடங்களில் வன்முறை வெடித்தது. அமித்ஷா பிரச்சாரத்தின் போது கூட கலவரம் வெடித்து ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டது.

தற்போது அங்கு 24வது பர்கானா மாவட்டத்தில் பத்தப்பரா பகுதியில் சந்திரா ஷா என்ற 24 வயது பா.ஜ.க. இளைஞரை அடையாளம் தெரியாத சிலர் ஞாயிறன்று இரவு சுட்டுக் கொன்றனர். இது அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் மேற்கு வங்கத்தில் வெறும் 2 தொகுதிகளை மட்டும் பிடித்த பா.ஜ.க. இந்த முறை 18 மக்களவை தொகுதிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading அமேதியை அடுத்து மே.வங்கத்தில் பா.ஜ.க. தொண்டர் சுட்டுக்கொலை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை