பத்து ஆண்டுகளில் வாங்கிய வாக்குகளை விட இந்த தேர்தலில் பா.ம.க. அதிக வாக்குகளைத்தான் பெற்றிருக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சித் தொண்டர்களுக்கு எழுதும் கடிதம் போல் வெளியிட்ட அறிக்கை வருமாறு :
தமிழ்நாட்டில் பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்து விட்டதாகவும், இனி அக்கட்சியால் எழவே முடியாது என்றும் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல். ‘யானை படுத்தாலும் குதிரை மட்டம்’ என்ற உண்மையை அறியாதது தான் அக்கூட்டம்.
பா.ம.க, போட்டியிட்ட 7 இடங்களில் மொத்தம் 23 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறது. இது 5.4 சதவீதமாகும். கடந்த 10 ஆண்டுகளில் பா.ம.க. வாங்கிய வாக்குகளை விட இது அதிகம்தான்.
தேர்தலில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. ஒரு தேர்தலில் வெற்றியடைந்த கட்சி, அடுத்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததையும், அந்த தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சி அதற்கு அடுத்த தேர்தலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வெற்றி பெற்றதையும் பார்த்திருக்கிறோம்.
பா.ம.க.வுக்கு வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று பாட்டாளி இளைஞர்கள் தீர்மானித்து விட்டால், அடுத்த மாதமே தேர்தல் வந்தாலும் அதில் எதிரணிகளை வீழ்த்தி வெற்றிகளை குவிக்க முடியும். இது சாத்தியமானது தான்.
கடந்த காலத் தேர்தல்களில் பா.ம.க அடைந்த தோல்விகளின் ஈரம் காயும் முன்பே நமது வாக்கு வலிமையை நிரூபித்துக் காட்டிய தருணங்கள் ஏராளம். இப்போதும் நமது வலிமையையும், செல்வாக்கையும் நிரூபித்துக் காட்ட இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள், இரு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் என வாய்ப்புகள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன.
பாட்டாளி இளைஞர்களும் போருக்காக காத்திருக்கும் புறநானூற்று வீரர்களைப் போல, மக்கள் சந்திப்பு, கொள்கைப் பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் நமது வலிமையை பெருக்கிக் கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.