மத்திய அரசில் நிதியமைச்சர்களாக பதவி வகித்தவர்களில் ஆறாவது தமிழர் என்ற சிறப்பை பெறுகிறார் நிர்மலா சீத்தாராமன்.
பா.ஜ.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றார். அவருடன் 24 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றனர். தனிப்பொறுப்பு இணையமைச்சர்களாக 9 பேரும், இணையமைச்சர்களாக 24 பேரும் பதவியேற்றனர்.
பிரதமரை சேர்க்காமல் மொத்தம் 57 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். பழைய அமைச்சர்களில் 36 பேருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. அதே சமயம், 20 புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. மொத்த அமைச்சர்களில் 6 பேர் பெண்கள்.
பெண்களில் நிர்மலா சீத்தாராமனுக்கு நிதியமைச்சர் பதவி தரப்பட்டிருக்கிறது. இதன்மூலம், மத்திய நிதியமைச்சர் பதவியை வகிக்கும் ஆறாவது தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஏற்கனவே சுதந்திர இந்தியாவில் முதல் நிதியமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார்(1947-49) பணியாற்றினார். அதன்பிறகு, டி.டி.கிருஷ்ணமாச்சாரி(1957-58, 1964-65), சி.சுப்பிரமணியன்(1975-77), ஆர்.வெங்கட்ராமன்(1980-82) ஆகிய தமிழர்கள் நிதியமைச்சர்களாக இருந்துள்ளனர்.
இதன்பிறகு, ப.சிதம்பரம் 1996-98, 2004-08, 2012-14 ஆகிய காலகட்டங்களில் நிதியமைச்சராக பணியாற்றியிருக்கிறார். தற்போது ஆறாவது தமிழராக நிர்மலா சீத்தாராமன் நிதியமைச்சர் பதவியேற்றுள்ளார். இன்று அவர் டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார். ஏற்கனவே கடந்த முறை அவர் பாதுகாப்பு துறை அமைச்சராக பணியாற்றியவர். அந்த வகையிலும் முதல் பெண் ராணுவ மந்திரி என்ற பெருமையை பெற்றவர்.