மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் பள்ளிகளில் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துள்ளது.மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு முயற்சிக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மத்திய அரசு, புதிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதற்கான வரைவைத் தயாரிக்கும் பணியில் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு ஈடுபட்டிருந்தது. இந்த பணிகள் முடிவடைந்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் புதிய கல்விக் கொள்கை வரைவு நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்பதற்காக, இணையதளத்தில் இந்த வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், நாட்டின் பரந்த நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் அறிந்துகொள்ளவும் மும்மொழிக்கொள்கை கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மும்மொழிக்கல்வி என்பது, தாய் மொழி, இணைப்பு மொழியான ஆங்கிலம் மற்றும் வேறொரு இந்திய மொழி என்று இருக்க வேண்டும் என்று வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழித்தேர்வு என்பது மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் தாய்மொழியைப் பொறுத்து மூன்றாவது மொழி அமைய வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு இந்திய மொழி என்றும், இந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலம், இந்தி என்றும் மூன்றாவது மொழித்தேர்வு இருக்க வேண்டும் என்று வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தி பேசும் மாநிலங்களில், மூன்றாவது மொழியை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தி பேசாத மாநிலங்களில், கட்டாயம் மூன்றாவது மொழியாக இந்தியை இணைக்க வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
புதிய கல்விக்கொள்கை வரைவு மீது ஜூன் 30-ந் தேதி வரை, பொதுமக்களும், கல்வியாளர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு முயற்சிக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியை திணித் தமிழகத்தில் பெரும் போராட்டம் வெடிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.திமுக எம்.பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பல்வேறு கட்சியினரும், தமிழ் அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.