‘நாங்கள் மீண்டும் எழுவோம்’ என்று நாடாளுமன்றக் காங்கிரஸ் குழு தலைவர் சோனியா காந்தி பேசினார்.
புதிய நாடாளுமன்றம் ஜூன் 17ம் தேதி கூடவுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சென்ட்ரல் ஹாலில் இன்று காலை நடைபெற்றது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட 52 மக்களவை உறுப்பினர்களும், ராஜ்யசபா உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற போது, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டார். இந்த முறை இரு அவைகளுக்கும் சேர்த்து, நாடாளுமன்றக் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ராகுல்காந்தி பேசுகையில், ‘‘கடந்த முறை 44 தொகுதிகளில் வென்றோம். இந்த முறையும் 52 தொகுதிகளில்தான் வென்றிருக்கிறோம். நாம் இப்போது கட்சியின் நிலை குறித்து ஆராய வேண்டும். தோல்வியில் இருந்து நாம் சரியான பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அரசியல் சட்டத்தை பாதுகாக்கவே நாம் போராடுகிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும், காங்கிரஸ் எம்.பி.க்கள் 52 பேரும் ஒவ்வொரு நாளும் பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராட வேண்டும். ஒவ்வொரு இந்தியருக்காகவும் நீங்கள் போராட வேண்டும். வெறுப்புணர்வு, கோபமும் உங்களுக்கு எதிராக போராடுகிறது. நீங்கள் இன்னும் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும்’’ என்றார்.
சோனியா காந்தி பேசுகையில், ‘‘இது நாம் முன்னெப்போதும் சந்திக்காத சூழலை சந்திக்கிறோம். தன்னம்பிக்கையுடன் இந்த தோல்வியில் இருந்து மீள வேண்டும். மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று நாம் சிறப்பாக செயல்பட வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். இன்னும் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. அத்தனை சவால்களையும் சந்தித்து மீண்டும் எழுவோம்’’ என்றார்.