புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.பி.சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நாளை அவர் பதவியேற்கிறார்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. சட்டமன்ற சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியி்ட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டியிருந்தது.
இந்நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியில் தற்போது துணை சபாநாயகராக உள்ள சிவக்கொழுந்து, லட்சுமிநாராயணன், அரசு கொறடா அனந்தராமன், எம்.என்.ஆர்.பாலன் ஆகியோர் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட விரும்பினர்.
சபாநாயகர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் இன்று நண்பகல் 12 மணி வரை சட்டசபை செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
எனினும், கால அவகாசமே கொடுக்காமல் அவசர, அவசரமாக சபாநாயகர் தேர்தலை ஆளும்கட்சி நடத்துவதாக கூறி என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று பகல் 12 மணியுடன் முடிவடைந்த நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் காங்கிரஸ் வேட்பாளர் சிவகொழுந்து போட்டியின்றி சபாநாயகராக தேர்வானார்.
புதுவை சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை மண்டபத்தில் கூட்டப்படுகிறது. சட்டமன்ற கூட்டத்தில் சபாநாயகராக சிவகொழுந்து பொறுப்பேற்பார்.
இதைத் தொடர்ந்து துணை சபாநாயகராக உழவர்கரை காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலன் தேர்வு செய்யப்படுவார் என்று முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.