‘‘எவ்வளவு வேகமாக எந்திரங்களை கைப்பற்றினார்களோ, அதே வேகத்தில் காணாமலும் போவார்கள்’’ என்று பா.ஜ.க.வை சாடியுள்ளார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
நாடாளுமன்றத் தேர்தலில் 303 இடங்களை அபாரமாக வென்று பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்ததும் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வாயை மூடிக் கொண்டன. ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி மட்டுமே பா.ஜ.க.வை இன்னமும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
‘‘மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் வெளியான தேர்தல் முடிவுகளில் இருந்தே வாக்குப்பதிவு எந்திரங்களில் பா.ஜ.க. மோசடி செய்திருப்பது தெளிவாக தெரிகிறது’’ என்று ஏற்கனவே மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.
மேலும், இனிமேல் வாக்குப்பதிவு எந்திரமே பயன்படுத்தக் கூடாது, வாக்குச்சீட்டு முறைக்கே திரும்ப வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் இணைந்து குரல் கொடுக்க வேண்டுமென்று கூறியிருந்தார். இந்நிலையில், இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர் என்று எல்லா மதத்தினரையும் சேர்ந்தது இந்த தேசம். இதுதான் எங்கள் கொள்கை, இதற்கு எதிராக யார் வந்தாலும் அவர்களை அழிப்போம்.
எதற்கும் கவலைப்படாதீர்கள். சில நேரங்களில் சூரியன் உக்கிரமாக இருக்கும். ஆனால், அதே சூரியக் கதிர்கள் மறைந்தும் போகும். யாரும் அச்சப்படத் தேவையில்லை. எவ்வளவு வேகமாக எந்திரங்களை கைப்பற்றினார்களோ, அதே வேகத்தில் காணாமலும் போவார்கள்.
இவ்வாறு மம்தா பேசினார்.