மாலத்தீவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான நிசான் இசுதீன் விருதினை மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது வழங்கி கவுரவித்தார்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற மோடி, முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவுக்கு இன்று சென்றடைந்தார்.
அவருக்கு விமானநிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது வெளியிட்ட ஒரு அறிவிப்பில், வெளிநாட்டு தலைவர்களுக்கு மாலத்தீவு அளிக்கும் மிக உயரிய விருதான நிசான் இசுதீன் விருதினை இந்திய பிரதமர் மோடிக்கு அளிக்கப்படும் என்று கூறியிருந்தார். இதனையடுத்து பிரதமர் மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது வழங்கப்பட்டது. வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான் இசுதீன் விருதை அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் முகம்மது வழங்கி கவுரவித்தார்.
மாலத்தீவில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம் முகம்மது, ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் கையெழுத்திட்டு தந்த பேட்டை மாலத்தீவு அதிபருக்கு பிரதமர் மோடி பரிசளித்தார். மேலும், மாலத்தீவின் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கவும் இந்தியா உதவும் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.