நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் போட்டி ஏன்? விஷால் கொடுத்த விளக்கம்

actor Vishal explains why their team again contesting Film actors union election:

by Nagaraj, Jun 8, 2019, 20:34 PM IST

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான பொதுச்சொத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த முறையும் நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி போட்டியிடுகிறது என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்

2019 - 2022-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 23-ந் தேதி நடைபெற உள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன், தேர்தல் அதிகாரியாக இருந்து இந்தத் தேர்தலை நடத்துகிறார்.

இந்தத்தடவையும் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர்.

பாண்டவர் அணியை எதிர்த்து தலைவர் பதவிக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோரும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால், தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்பது நிச்சயமாகி விட்டது.

இந்நிலையில் விஷால் உள்ளிட்ட பாண்டவர் அணியினர், இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், கடந்த முறை போட்டியிட்ட அதே பாண்டவர் அணியே, இம்முறையும் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் நாங்கள் என்னவெல்லாம் சொன்னோம், என்னவெல்லாம் செய்தோம், சொன்னதற்கு மேலும் என்னென்ன செய்தோம். இன்னும் 6 மாதங்களுக்குள் திறப்பு விழா காணக்கூடிய அளவுக்கு கட்டிட வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்தக் கட்டிடம் கட்டுவதைத் தடுக்க பலரும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அதற்கு ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டோம். எங்களுடைய நேர்மை, உழைப்பு பற்றிய கேள்விகளுக்கு, இந்தத் தேர்தலில் நாங்கள் பதில் சொல்வோம். இந்தக் கட்டிடம் கண்டிப்பாக வரவேண்டும். யாரும் அதற்குத் தடையாக இருக்கக் கூடாது.

நீதிமன்றத்துக்குச் சென்று கட்டிடத்தைத் தடுப்பது எஸ்.வி.சேகர் என்பது ஊர் உலகத்துக்கே தெரியும். கட்டிடம் கட்டவிடாமல் தடுக்க இன்னும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். தடை விதிக்கப்படாமல் நீதிமன்றத்தில் நாங்கள் நியாயமாகத் தீர்ப்பு வாங்கினோம். அந்தக் காலதாமதத்தில், 4 மாதங்களுக்கு கட்டிடப் பணிகள் நடைபெறவில்லை. அதுமட்டும் நடக்கவில்லையென்றால், இந்நேரம் கட்டிட வேலை முடிந்திருக்கும். அந்தக் கட்டிடத்தில் தேர்தலை நடத்தலாம் என்றுதான் முன்னர் நினைத்திருந்தோம்.

கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில், நடிகர் சங்கக் கட்டிடம் தவிர்த்து மற்ற அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம்.
என்னைப் பொறுத்தவரை, என்னைச் சார்ந்த பொதுச்சொத்தைக் காப்பாற்றுவதற்கு, என்னுடைய நேர்மையைக் காப்பாற்றுவதற்காகத் தேர்தலில் நிற்கிறேன்.

தேர்தலை முன்னிட்டு முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் ஆசி பெறுவதற்காக சந்திக்க நேரம் கேட்கப் போகிறோம். கூடிய விரைவில் கட்டிடம் தயாராகப் போகிறது. அதன் திறப்பு விழா உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே தெரிவிப்போம் என விஷால் தெரிவித்துள்ளார்.

You'r reading நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் போட்டி ஏன்? விஷால் கொடுத்த விளக்கம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை