திமுகவில் உள்ள பல்வேறு அணிகளில் பிரதானமான அணி இளைஞர் அணி. வழக்கறிஞர் அணி, மகளிர் அணி இப்படி எத்தனையோ அணிகள் இருந்தாலும் இளைஞர் அணி தான் திமுகவில் டாப்பில் உள்ளது.
ஏனென்றால் அந்த அணியின் செயலாளராக கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வழிநடத்தியவர் மு.க.ஸ்டாலின். இதன் காரணமாக இளைஞர் அணியில் ஒரு சிறிய பொறுப்பு கிடைத்தால் கூட உ.பி.க்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள். இந்நிலையில் 2017- ஆண்டு ஜனவரி மாதம் ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட போது அவரிடம் இருந்த இளைஞரணி செயலாளர் பதவி முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனிடம் கொடுக்கப்பட்டது.
அவரும் கடந்த இரண்டரை ஆண்டு காலம் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இளைஞரணியை தலைமையேற்று ஸ்டாலினின் கண் அசைவுக்கு ஏற்றவாறு கொண்டு சென்றுகொண்டிருக்கிறார்.
இதனிடையே உதயநிதி ஸ்டாலின் அரசியல் பிரவேசம் செய்துள்ளதால், அவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி தர வேண்டும் என அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் திமுகவில் உள்ள இளைஞர்களும் உதயநிதிக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும் என அறிவாலயத்திற்கு படையெடுத்து வருகிறார்கள்.
நடப்பதை எல்லாம் நன்கு கவனித்த ஸ்டாலின் உதயநிதிக்கு இளைஞரணியில் பொறுப்பு கொடுக்க முடிவெடுத்துவிட்டாராம். அநேகமாக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வெற்றியை கொடுத்துவிட்டு உதயநிதிக்கு பதவி தரப்படலாமாம். இதனிடையே உள்ளாட்சித் தேர்தலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இப்போதே அறிவிப்பை வெளியிடுங்கள் என கட்சியில் ஒரு கோஷ்டி ஸ்டாலினை நச்சரிக்கிறார்களாம்.
அவர் இது தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம்.எப்படிப்பார்த்தாலும் உள்ளாட்சித் தேர்தலுக்குள் அல்லது உள்ளாட்சி தேர்தல் முடிந்த கையுடன் உதயநிதிக்கு பரிவட்டம் கட்டப்படும் என ஆணித்தரமாக கூறுகின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.