பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் எந்தவித காரசார விவாதமின்றி நடந்து முடிந்துள்ளது. கூட்டத்தில் வழக்கம் போல சில தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏவும், மாவட்டச் செயலாளருமான ராசன்செல்லப்பா திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால் அதிமுகவில் பெரும் கலகம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவசரமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டு இன்று காலை கூட்டம் தொடங்கியது.
அடுத்து என்ன நடக்குமோ? என்ற உச்சக்கட்ட பதற்றமான சூழலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதால் கூட்டத்தில் என்ன பேசப்போகிறார்களோ? என்ன முடிவு எடுக்கப்படுமோ என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம், காரசார விவாதங்கள் ஏதுமின்றி ஒரு வழியாக அமைதியாக முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
கூட்டம் முடிந்து வெளியில் வந்த அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கூட்டம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லாமல், கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. ஒற்றைத் தலைமை பற்றியெல்லாம் விவாதிக்கப்படவில்லை என்று போகிற போக்கில் ஒற்றை வரிப் பதிலை கூறி விட்டுச் சென்றனர்.கூட்டத்தில் அவைத் தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே தங்கள் கருத்துக்களை வலியுறுத்தி பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அதிமுக தலைமைக் கழகம் சார்பில் செய்திக்குறிப்பு மட்டும் வெளியிடப்பட்டது. அதில், நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி..ஒத்துழைப்பு கொடுத்த கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி..பிரதமர் பதவிக்கு மோடியை வழிமொழிய அதிமுகவுக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி.. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியில் பெரும் மாற்றம் நிகழும்.. அதிரடி அறிவிப்புகள் இடம் பெறலாம் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், எவ்வித சலசலப்புமின்றி உப்புச் சப்பில்லாத தீர்மானங்களுடன் கூட்டம் நிறைவடைந்துள்ளது தற்போதைய அதிமுக அமைச்சர்களுக்கும், மூத்த நிர்வாகிகளுக்கும் பெருத்த மகிழ்ச்சியளித்தாலும், கட்சியில் மாற்றத்தை எதிர்பார்த்த ராசன் செல்லப்பா போன்ற அதிருப்தியாளர்கள் பலருக்கும் ஏமாற்றமாகி விட்டது என்று கூறப்படுகிறது.