புஸ்.ஸ்.ஸ்.... ஆகிப் போன அதிமுக ஆலோசனை கூட்டம்

No important issues including General secretary post issue discussed in admk meeting

by எஸ். எம். கணபதி, Jun 12, 2019, 14:56 PM IST

அ.தி.மு.க.வின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் எந்த களேபரமும் இல்லாமல், முக்கிய விஷயங்களே பேசப்படாமல் புஸ்... ஆகி முடிந்து விட்டது.

அநாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க.வில் பல்வேறு குழப்பங்கள் வெளியில் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றை அப்படியே மறைத்து கட்சியை நடத்துவதற்கு எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் முயற்சி பண்ணியும் அது நடக்கவி்லலை. மதுரை வடக்கு எம்.எல்.ஏ.வான ராஜன் செல்லப்பா, ‘கட்சிக்கு யாருக்கு அதிகாரம்? ஒற்றைத் தலைமை இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியவி்லலையே...’’ என்று கொளுத்திப் போட்டு விட்டார்.

உடனே அவரது பேச்சை ஆமோதித்து அடுத்த எம்.எல்.ஏ.வும், பெரம்பலூர் மாவட்டச் செயலாளருமான குன்னம் ராமச்சந்திரன் பேசி, ஒரு வீடியோ வெளியிட்டு விட்டார். அது மட்டுமல்ல, தனது குடும்பத்தின் வளமைக்காக சுயநலத்துடன் கழகத்தை வளைத்து செயல்படக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வத்தை போட்டு தாக்கினார். அதாவது, ‘‘ஓ.பி.எஸ் தனது மகனுக்கு மந்திரி பதவி பெறுவதற்காக கட்சியை காவு கொடுக்கிறார்’’ என்று மறைமுகமாக குத்திக் காட்டினார். அதே சமயம், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ‘‘அம்மா இருந்தால் ராஜன்செல்லப்பா இப்படி பேசுவாரா?’’ என்று செல்லப்பாவுக்கு எதிர்ப்பு காட்டினார்.

இது இன்னும் பெரிய சர்ச்சையாகி விடாமல் தடுப்பதற்காக ஜூன் 12ம் தேதி அ.தி.மு.க. அமைச்சர்்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். இணைந்து அறிக்கை வெளியிட்டனர். கட்சிப் பிரச்னைகளை யாரும் வெளியில் பேசக் கூடாது என்றும் அறிக்கை விட்டனர்.

அறிவித்தபடி இன்று அந்த ஆலோசனை கூட்டம், கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள்,எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நேரடியாக சந்தித்து கொள்ளாமல் நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்தனர். இதற்கு பின்புதான், ராஜன்செல்லப்பா, குன்னம் ராமச்சந்திரன் பேச்சுகள் சர்ச்சையை கிளப்பின. ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ராஜன்செல்லப்பாவும், எடப்பாடிக்கு ஆதரவாக குன்னம் ராமச்சந்திரனும் பேசுவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், அது எதையும் காட்டிக் கொள்ளாமல் பன்னீசெல்வமும், எடப்பாடியும் அருகருகே அமர்ந்து சிரித்தபடி காட்சி தந்தனர். கூட்டம் தொடங்கும் முன்பு இருவரும் ஒன்றுமே நடக்காதது போல் பேசிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையே, அ.தி.மு.க அலுவலக வாசலில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் ‘‘புதிய பொது செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே! அதுவே அனைத்து தொண்டர்களின் எதிர்பார்ப்பு’’ என்று குறிப்ப்ிடப்பட்டிருக்கிறது.

இதேபோல், அ.தி.மு.க.வில் செங்கோட்டையனை பொதுச் செயலாளராக ஆக்க ேவண்டும் என்று கோரிக்கை விடுத்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிலர் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.

அதனால், கூட்டத்தில் சலசலப்புகள் ஏற்படலாம் என்று நடுநிலையான சில நிர்வாகிகள் ஆவலுடன் எதிர்பார்த்து அமைதியாக உட்கார்ந்திருந்தனர். ஆனால், அது பொய்த்து போனது. ஏனெனில், குன்னம் ராமச்சந்திரன் உடல்நிலை காரணமாக கூட்டத்திற்்கே வரவில்லை. கொளுத்திப் போட்ட ராஜன்செல்லப்பா வாயே திறக்கவில்லை.
கூட்டம் தொடங்கியதும், அவைத் தலைவர் மதுசூதனன் மட்டும் பேசினார்.

‘‘எதிர்க்கட்சியினர் மெல்லுவதற்கு நாமே அவல் கொடுத்து விடக் கூடாது, நம் ஆட்சியை கவிழ்ப்பதற்கு எல்லோரும் முயற்சிப்பார்கள். அதற்கு நாம் இடம் அளிக்கக் கூடாது. இன்னும் 2 ஆண்டுகள் ஆட்சி இருக்கிறது. அதை பாதுகாக்க வேண்டுமென்றால், யாரும் வெளியில் எதுவும் பேசக் கூடாது’’ என்ற ரீதியில் பேசினார். இதே போல், எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் பேசினார்கள்.

ஆனால், கடைசி வரை ஒற்றைத் தலைமை என்பது குறித்தோ, தேர்தல் ே்தால்விக்கு யார் காரணம் என்பது குறித்தோ யாரும் பேசவில்லை. வழக்கமாக, ஜெயலலிதா காலத்தில் தீர்மானங்களே பத்து பதினைந்து நிறைவேற்றப்படும். இப்போது அது கூட இல்லை. பக்கம், பக்கமாக தீர்மானம் எழுதாமல் இரண்டே பக்கங்களில் ஐந்தே தீர்மானங்களுடன் முடித்து விட்டார்கள்.

இது பற்றி, செய்தி தொடர்பாளர் ஒருவரிடம் நாம் பேசிய போது, ‘‘கட்சியில இரண்டு அணியிலுமே புகைச்சல் இருப்பது உண்மைதான். ஆனால், யாருமே கட்சியை உடைக்கவோ, ஆட்சியை இழக்கவோ விரும்பவில்லை. அதனால், அதிருப்தி குரல் எழுப்பியவர்களை முன்கூட்டியே முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொலைபேசியில் பேசியே சமாதானம் செய்து விட்டார்கள். அதனால்,கூட்டத்தில் எதுவுமே நடக்காமல் புஸ்..னு ஆகிருச்சு சார்...’’ என்றார்.

அதனால், கட்சிக்குள் முட்டல், மோதல் இருந்தாலும் ஆளும்கட்சியாக உள்ள வரை யாரும் எந்த பிரச்னையும் கிளப்ப மாட்டார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது.

You'r reading புஸ்.ஸ்.ஸ்.... ஆகிப் போன அதிமுக ஆலோசனை கூட்டம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை