பாகிஸ்தான் வான்வெளியில் .பிரதமர் மோடியின் விமானம் பறக்க, அந்நாடு அனுமதி கொடுத்தும் இந்தியா அதனை ஏற்க மறுத்துள்ளது. நாளை உஸ்பெகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியின் விமானம், மாற்றுப்பாதையிலேயே பறக்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஸ்கெக் நகரில் எஸ்சிஓ எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நாளையும், நாளை மறுதினமும் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார்.
கிர்கிஸ்தான் செல்ல பாகிஸ்தான் வான்வெளி வழியாக பயணித்தால் பயண நேரம் 4 மணி நேரம் மட்டும் தான். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானின் பாலகோட்டில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்தியா விமானப் படை தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்துவிட்டது. இதனால் ஓமன், ஈரான் நாடுகளைச் சுற்றி கிர்கிஸ்தான் செல்ல வேண்டும். பயண நேரமும் 7 மணி நேரத்திற்கு அதிகமாகும்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதி கோரி இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் பாகிஸ்தானுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.பாகிஸ்தானும் பெருந்தன்மையாக நேற்று அனுமதி வழங்கியிருந்தது. ஏற்கனவே கடந்த மாதம் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணித்த விமானத்திற்கும் பாகிஸ்தான் அனுமதி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாகிஸ்தான் அனுமதி கொடுத்த நிலையிலும், பிரதமரின் விமான பயணம் குறித்து வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவிப்பை திடீரென வெளியிட்டுள்ளது. அதன்படி பிரதமரின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்காது. ஓமன், ஈரான் வழியே சுற்றித்தான் பிரதமரின் விமானப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.பாகிஸ்தான் அனுமதி கொடுத்தும், இந்தியா திடீரென மறுத்துள்ளதற்கான காரணம் எதுவும் கூறப்படாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.