மத்திய அமைச்சர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வந்து விட வேண்டும் என்றும் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கக் கூடாது என்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
பிரதமராக 2 முறை பதவியேற்றுள்ள மோடி, முதல் அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டினார். அப்போது அவர் அமைச்சர்களுக்கு நிறைய அட்வைஸ் செய்துள்ளார். இது குறித்து மத்திய இணை அமைச்சர் ஒருவர் கூறியதாவது:
பிரதமர் மோடி நிறைய அட்வைஸ் கொடுத்தார். மத்திய அமைச்சர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு அலுவலகம் வந்து விட வேண்டும். வீட்டில் உட்கார்ந்து ெகாண்டே வேலை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களுக்கு உதாரணமாக நாம் இருக்க வேண்டும் என்று சொன்னார்.
அதே போல், மூத்த அமைச்சர்கள் தங்கள் துறையின் முக்கிய கோப்புகளையும் இணை அமைச்சர்களுக்கு அனுப்பி கருத்துக்களை கேட்டறிய வேண்டும். நேரத்தை மிச்சப்படுத்த இணை அமைச்சர்களையும் அழைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள இணை அமைச்சர்களுக்கு மூத்த அமைச்சர்கள் நிறைய கற்றுத் தர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
அடுத்த வாரம், நாடாளுமன்றம் கூடுகிறது. அந்த தொடர் நடைபெறும் போதும் கூட அமைச்சர்கள் வழக்கம் போல் எம்.பி.க்களையும், பொது மக்களையும் சந்தித்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். மத்திய நிதியமைச்சர் நிர்்மலா சீத்தாராமன், பட்ஜெட் ஆலோசனைகளை அளிக்குமாறு மற்ற அமைச்சர்களை கேட்டுக் கொண்டார்.
இவ்வாறு அந்த இணை அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த முறை மோடி அரசில் மூத்த அமைச்சர்கள் நிதின் கட்கரி, அருண் ஜெட்லி உள்ளிட்ட சிலர் தாங்கள் விரும்பிய நேரங்களில்தான் அலுவலகத்திற்கு வருவார்கள். சில சமயங்களில் அவர்கள் பங்களாவில் உள்ள முகாம் அலுவலகத்திலேயே அமர்ந்து வேலை பார்ப்பதுண்டு. இவர்களுக்காகவே பிரதமர் இந்த முறை ஆரம்பத்திலேயே அட்வைஸ் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.