திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பயணித்த விமானத்தில், தானும் செல்ல விரும்பாத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 100 கி.மீ. தூரத்துக்கும் மேலாக காரில் பயணித்து வேறு விமானத்தில் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. ரத்தினவேல் இல்ல திருமண விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று திருச்சி வந்திருந்தார். அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க மு.க.ஸ்டாலினும் 2 நாட்களாக திருச்சியில் முகாமிட்டிருந்தார்.
இருவரும் நேற்று இரவு சென்னைக்கு விமானத்தில் திரும்புவதாகத் திட்டம். இதற்காக இரவு 8 மணிக்கு திருச்சியிலிருந்து சென்னை செல்லும் தனியார் விமானத்தில் டிக்கெட்டுகளும் புக் செய்யப்பட்டிருந்தது. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பயணிக்கும் விமானத்தில் மு.க.ஸ்டாலினும் டிக்கெட் புக் செய்திருப்பது கடைசி நேரத்தில் தான் அரசு அதிகாரிகளுக்கு தெரிய வந்து விக்கித்துப் போயுள்ளனர்.
மு.க.ஸ்டாலினுடன் ஒரே விமானத்தில் செல்ல முதல்வர் விரும்ப மாட்டார் என நினைத்த அதிகாரிகள், மு.க.ஸ்டாலின் தரப்பில் பேசி, பயணத் திட்டத்தை மாற்ற முடியுமா? என்று கெஞ்சாத குறையாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் அதற்கு சம்மதம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் முதல்வர் எடப்பாடியின் விமான டிக்கெட் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அவசர அவசரமாக முதல்வரின் வாகனம் திருச்சியிலிருந்து நாமக்கல் வழியாக சேலம் விரைந்தது. அங்கு இரவு 11 மணிக்கு புறப்பட்ட தனியார் விமானத்தை பிடித்து நள்ளிரவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை திரும்பினார்.
அரசியலில் எதிரெதிர் கட்சிகளில் இருந்தாலும், கட்சி வேறுபாடுகளை மறந்து விருந்து, விழாக்களில் பங்கேற்பது தமிழகத்தில் தவிர்த்து மற்ற மாநிலங்களில் அரசியல் தலைவர்களிடையே சகஜமான ஒன்று. ஆனால் தமிழகத்தில் தான் இரு திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் ஒரே விமானத்தில் பறப்பது கூட பாவம் என்பது போன்ற அவலமான கொடுமை கடந்த பல ஆண்டுகளாக நீடிக்கிறது. எப்போது மாறுமோ இந்த நிலைமை?. ஆனாலும் மாறணும் என்பதே இன்றைய தமிழக மக்களின் விருப்பம் என்பதை புரிந்து கொண்டால் சரி.