விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ கு.ராதாமணி உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். இதனால் இன்னுமொரு இடைத்தேர்தலை தமிழ்நாடு சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
67 வயதான ராதா மணி கடந்த 2016 தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியிலிருந்து திமுக சார்பில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். புற்றுநோய் பாதிப்பு காரணமாக சில வாரங்களாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ மரணம் எய்தினார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வைக்கப்ப்டுள்ள அவரது உடலுக்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தியும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் தான் இடைத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் குமரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்ற வசந்தகுமார், நான்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். ராதாமணியின் மறைவால் விக்கிரவாண்டி தொகுதியும் காலியாவதால், விரைவில் நான்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.