17-வது மக்களவையின் புதிய சபாநாயகராக ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஓம்பிர்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மத்தியில் புதிய அரசு ஆட்சியில் அமர்ந்துள்ளது. மோடி தலைமையில் புதிய அமைச்சரவை கடந்த மாதம் 30-ந் தேதி பதவி ஏற்ற நிலையில், 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியுள்ளது. இதில், தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட வீரேந்திர குமார், புதிய எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இன்றும் எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி தொடர்கிறது .
நாளை மக்களவையின் புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. சபாநாயகர் பொறுப்புக்கு மேனகா காந்தி தேர்வு செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், சபாநாயகர் பொறுப்புக்கு ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் கோடா தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லா, அமித்ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. ஓம் பிர்லாவை சபாநாயகர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டதை அவரது மனைவி அமிதா பிர்லாவும் உறுதி செய்துள்ளார்.
ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த அமிதா பிர்லா, இதனை உறுதி செய்துள்ளதுடன்,ஓம் பிர்லாவை தேர்வு செய்ததற்க்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஓம் பிர்லாவை மக்களவை சபாநாயகராக நியமிக்க எதிர்க்கட்சிகளும் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நாளை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. துணை சபாநாயகர் பதவியை கூட்டணி அல்லது நட்புக் கட்சிகளுக்கு ஒதுக்குவது இதுவரை வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் எந்தக் கட்சிக்கு பாஜக தரப்பு வழங்கப் போகிறது என்பது இதுவரை உறுதியாகவில்லை.துணை சபாநாயகர் பதவியை ஒய்.எஸ்.ஆர். கட்சிக்கு வழங்க பாஜக முன் வந்த போதும், அதனை ஏற்க ஜெகன் மோகன் தயக்கம் காட்டி வருகிறார். இதனால் சிவசேனா கட்சிக்கு அந்த வாய்ப்பு கிட்டும் என்று தெரிகிறது.