மக்களவை சபாநாயகர் யார்? பா.ஜ.க.வில் பரபரப்பு விவாதம்

who will be the 17th Loksabha speaker, long debate in bjp

by எஸ். எம். கணபதி, Jun 2, 2019, 12:57 PM IST

பா.ஜ.க.வில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்களுக்கு இடையே 17வது மக்களவை சபாநாயகர் யார் என்ற விவாதம் பரபரத்து கொண்டிருக்கிறது. மேனகா காந்திக்கு கொடுப்பார்களா அல்லது சுத்தமாக அவர் ஓரங்கட்டப்பட்டு விடுவாரா என்ற பேச்சும் ஓடிக் கொண்டிருக்கிறது.

 


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. மட்டுமே 303 இடங்களில் அபாரமாக வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுள்ளார். மோடியின் முதல் மந்திரிசபையில் இடம்பெற்ற 20க்கும் மேற்பட்ட அமைச்சர்களுக்கு இந்த முறை வாய்ப்பு தரப்படவில்லை.

சுஷ்மா சுவராஜ், உமா பாரதி உள்ளிட்டோர் தாங்கள் ஓரங்கட்டப்படுவோம் என்பதை உணர்ந்து முன்கூட்டியே தேர்தலில் சீட் கேட்காமல் ஒதுங்கினர். உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் அருண் ஜெட்லிக்கு கடைசி வரை நிதிமந்திரி பதவி மீது ஆசை விடாமல் இருந்தது. ஆனால், அவரை மோடியும், அமித்ஷாவும் சந்தித்து சமாதானப்படுத்தி ஓய்வெடுக்கச் சொல்லி விட்டனர்.


இந்த சூழலில், உத்தரபிரதேசத்திற்கு பிரதமர் மற்றும் 9 அமைச்சர் பதவிகள் தரப்பட்டிருக்கிறது. விரைவில் வரவிருக்கும் அம்மாநில சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு இந்த முடிவை அமித்ஷாவும், மோடியும் எடுத்திருக்கிறார்கள். ஆனாலும் கூட, கடந்த முறை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த மேனகா காந்திக்கு இந்த முறை மந்திரி பதவி தரப்படவில்லை. அவரும் உ.பி.யில் இருந்துதான் சுல்தான்பூர் தொகுதி எம்.பி.யாக தேர்வாகியுள்ளார்.
தற்போது 8வது முறையாக எம்.பி.யாகியுள்ள மேனகா காந்திக்கு தற்காலிக சபாநாயகர் பொறுப்பு தரப்படும் என்றும், அவரே ஜூன் 17ம் தேதி கூடும் மக்களவையை நடத்தி, அனைத்து உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்றும் பேசப்படுகிறது. அதே போல், அவரே 17வது மக்களவையின் சபாநாயகர் ஆகவும் தேர்வு செய்யப்படுவாரா என்றும் பேசப்படுகிறது. ஏற்கனவே 2004ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தற்காலிக சபாநாயகராக இருந்து, சபாநாயகராவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இது ஒரு புறமிருக்க, மேனகாவை ஓரங்கட்டி விட்டார்கள். அவருக்கு தற்காலிக சபாநாயகர் பதவி கூட தரப்படாது என்றும் பா.ஜ.க.வினர் மத்தியில் முணுமுணுக்கப்படுகிறது. அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லீம்களைப் பற்றி பேசி சர்ச்சையானது. அதே போல், அனந்த்குமார் ஹெக்டே, காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே புகழ் பாடி சர்ச்சையானது. அதனால்தான், அவர்கள் 2 பேருக்குமே அமைச்சர் பதவி தரப்படாமல் ஓரங்கட்டப்பட்டனர் என்கிறார்கள்.


அப்படி ஒரு வேளை, மொத்தமாக மேனகா ஓரங்கட்டப்பட்டால், தற்காலிக சபாநாயகராக காங்கிரசைச் சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ், சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரில் ஒருவரை ஜனாதிபதி நியமிக்கலாம் என தெரிகிறது. கடந்த 2014ல் காங்கிரசின் கமல்நாத் தற்காலிக சபாநாயகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல், சபாநாயகர் பதவிக்கு சீனியர் ஒருவரைத்தான் நியமிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. ஏற்கனவே பல முறை எம்.பி.யாக இருந்தவர் என்றால், எதிர்க்கட்சிகளுடன் நல்லுறவு வைத்து நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவார் என்பதற்காகத்தான் சீனியரை தேர்வு செய்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் ஆட்சியி்ல 6வது மக்களவை சபாநாயகராக முதல் முறை எம்.பி.யான நீதிபதி கே.எஸ்.ஹெக்டேவை தேர்வு செய்தார்கள். 7வது மக்களவை சபாநாயகராக பலராம் ஜாக்கர் தேர்வான போது அவரும் முதல் முறை எம்.பி.யாக தேர்வானவர்தான்.
இந்த சூழ்நிலையில், யார் மக்களவை சபாநாயகராக வருவார் என்று பா.ஜ.க.தரப்பில் மட்டுமின்றி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிலும் பல விதமான விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒன்றை மட்டும் எல்லோரும் சொல்கிறார்கள். மோடிக்கும், அமித்ஷாவுக்கும் கட்டுப்பட்டு நடக்கக் கூடியவர்தான் சபாநாயகர் பதவிக்கு வருவார் என்பதுதான் அது.

You'r reading மக்களவை சபாநாயகர் யார்? பா.ஜ.க.வில் பரபரப்பு விவாதம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை