ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு 72 நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்பட மத்திய அரசின் 26 பணிகளை உள்ளடக்கிய சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது.
மதிப்பெண்கள் அடிப்படையில், முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், முக்கியத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு, நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள். அப்போதும் மதிப்பெண் அடிப்படையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.ஆர்.எஸ் என்று பிரித்து அனுப்பப்படுவார்கள்.
இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் பணிகளில் 896 காலியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் பல லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதைத் தொடர்ந்து, சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு இன்று தொடங்கியது.
நாடு முழுவதும் 72 நகரங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, வேலூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டும் தேர்வு மையங்களில் மாணவர்கள் மற்றும் பல்வேறு பணிகளில் உள்ளவர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
முதல்நிலை தேர்வு 2 தாள்களாக பிரித்து நடத்தப்படுகிறது. காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையில் முதல் தாளும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையில் 2-ம் தாளும் என முதல்நிலை தேர்வு நடக்கிறது. காலையில் பொது அறிவு தொடர்பான தேர்வும், பிற்பகலில் திறனறிவு தொடர்பான தேர்வும் நடத்தப்பட உள்ளது.