ஜெ. சமாதிக்கு எடப்பாடி திடீர் விசிட்... அமைச்சர்களுடன் மலர் தூவி, மண்டியிட்டு வணங்கினார்

TN CM edappadi Palani Samy and some ministers visits Jayalalithaa memorial

by Nagaraj, Jun 18, 2019, 20:03 PM IST

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஜெயலலிதா சமாதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் சகிதம் திடீர் விசிட் செய்தார். சமாதியில் மலர் தூவிய முதல்வர் எடப்பாடியும், அமைச்சர்கள் பலரும் மண்டியிட்டு வணங்கினர்.

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப் பேரவை இடைத்தேர்தல் மும்முரத்தில் அதிமுகவினர், ஜெயலலிதா சமாதியை மறந்தே போய்விட்டனர் என்றே கூறலாம். இது பற்றி சமீபத்தில் கட்சியில் போர்க்குரல் கொடுத்த மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராசன்செல்லப்பா கேள்வி எழுப்பியிருந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

துணை முதல்வர் ஓபிஎஸ், தேனி தொகுதியில் வெற்றி பெற்ற தனது மகனுடன் சேர்ந்து ஜெயலலிதா சமாதிக்கு சென்று வணங்கியதை குறிப்பிட்டிருந்த ராசன்செல்லப்பா, இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற 9 அதிமுக எம்எல்ஏக்கள் ஜெ. சமாதிக்கு செல்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன் ஜெயலலிதா சமாதிக்கு எம்எல்ஏக்கள் செல்ல அறிவுரை கூறாதது ஏன்? வழிகாட்ட மறந்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஜெயலலிதா சமாதியில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் ஒட்டுமொத்தமாக செல்லவில்லையே தவிர, எம்எல்ஏக்கள் தனித்தனியே சென்று ஜெ. சமாதியில் அஞ்சலி செலுத்தியதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இந்நிலையில் இன்று மாலை அமைச்சர்கள் சகிதம் ஜெயலலிதா சமாதிக்கு விசிட் அடித்தார் எடப்பாடி பழனிச்சாமி. மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சமாதியில் மலர் தூவிய முதல்வர் எடப்பாடி, மண்டியிட்டு வணங்கி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, எஸ்.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ், கடம்பூர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்களும் சமாதியில் மலர் தூவி, மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், தமிழக அரசு சார்பில் சுமார் 50 கோடி ரூபாய் செலவில் ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணிகளை முதலமைச்சர் பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதாவின் புகழுக்கு புகழ் சேர்க்கும் விதமாக நினைவு மண்டபம் அமைகிறது என்றும் இன்னும் 5 மாத காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெறும் என்றும் கூறினார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு, கட்டுமானப் பணிகளை பார்வையிடுவதாகக் கூறி ஜெயலலிதா சமாதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றது பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது. அதிலும், குறிப்பிட்ட சில அமைச்சர்களை மட்டும் அழைத்துச் சென்று அம்மா சமாதியில் சாஷ்டாங்கமாக விழுந்து எடப்பாடி மரியாதை செலுத்தியது, அதிமுகவுக்குள்ளேயே பரபரப்பான பேச்சாகியுள்ளது

You'r reading ஜெ. சமாதிக்கு எடப்பாடி திடீர் விசிட்... அமைச்சர்களுடன் மலர் தூவி, மண்டியிட்டு வணங்கினார் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை