தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 28-ந் தேதி கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சபாநாயகருக்கு எதிராக திமுக சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது இந்தக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படலாம் என்பதால் சட்டசபையில் பல்வேறு பரபரப்புகளுக்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.
தமிழக சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது.மக்களவைத் தேர்தல் காரணமாக கூட்டத் தொடர் முன் கூட்டியே தள்ளி வைக்கப்பட்டது.பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த வேண்டியுள்ளதால் தேர்தல் முடிவடைந்தவுடன் சட்டப்பேரவை மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 28-ந் தேதி சட்டப்பேரவை கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட படுதோல்வி, அதிமுகவில் நிலவும் கோஷ்டிப் பூசல், தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சம் போன்ற பிரச்னைகளுக்கு இடையே சட்டப் பேரவை கூட உள்ளதால் விவாதம் அனல் பறக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் சபாநாயகர் தனபாலுக்கு எதிராக திமுக சார்பில் கொடுக்கப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானமும் நிலுவையில் உள்ளது. அந்தத் தீர்மானமும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்புள்ளது. அதே வேளையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எதிராகவும் திமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 13-ல் தோற்று, 9-ல் மட்டும் வெற்றி பெற்றது அதிமுக. எப்படியானாலும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் வெற்றி பெற்று அதிமுக அரசு தப்பிப் பிழைத்து விட்டது. ஆனாலும் அதிமுகவில் தற்போது ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இலைமறை காயாக உள்ள கோஷ்டிப் பூசலால் ஆட்சிக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நேரிடலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்நிலையில் அடுத்த வாரம் கூட உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.