மக்களவையில் அதிமுக குழுத் தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் பி.ரவீந்திரநாத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவையில் அதிமுகவுக்கு ஒரே ஒரு எம்.பி.தான் என்பதால் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக அனைத்து விவகாரங்களிலும் முன்னிறுத்தப்பட்டு செயல்படப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவும், கூட்டணிக் கட்சி ஆளும் படுதோல்வியைச் சந்திக்க, தேனியில் மட்டும் துணை முதல்வர் ரவீந்திரநாத் குமார் கண்டம் தப்பி வெற்றி பெற்றார். இதனால் கடந்த முறை 37 எம்.பி.க்களுடன் கெத்தாக மக்களவைக்குள் காலடி எடுத்து வைத்த அதிமுகவுக்கு இந்த முறை ஒண்ணே ஒண்ணு, கண்ணு என்ற ரீதியில் ரவீந்திரநாத் குமார் ஒருவர் மட்டுமே மக்களவைக்கு சென்றுள்ளார். பாஜக கூட்டணியில் இவருக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுகவில் நிலவிய கோஷ்டிப் பூசலால் கிடைக்காமல் பறிபோய்விட்டது.
இந்நிலையில் மக்களவையில் அதிமுக எம்.பி.க்கள் குழுவுக்கு ரவீந்திரநாத் குமாரை தலைவராக நியமனம் செய்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இதனால் மக்கௗவையில் முக்கிய விவாதங்கள், முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்திலுமே ரவீந்திரநாத் குமார் மட்டுமே முன்னிறுத்தப்பட்டு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக வலம் போகிறார் என்பதை அதிமுக தலைமை உறுதி செய்துள்ளது.