மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் தமிழிலேயே பதவிப் பிரமாணம் ஏற்றனர்.அப்போது தமிழ் வாழ்க என்ற கோஷத்துடன், பெரியார், காந்தி, அம்பேத்கர், காமராஜர், கலைஞர் ஆகியோரின் பெயர்களும் உச்சரித்து வாழ்க முழக்கமிட்டு மக்களவையில் தமிழின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்து தமிழுக்கு பெருமை சேர்த்தனர்.
17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 542 எம்.பி.க்கள் வரிசைப்படி நேற்றும், இன்றும் பதவியேற்று வருகின்றனர். தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட வீரேந்திரகுமார் எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.நேற்று முதலில் பிரதமர் மோடி எம்.பி.யாக பதவியேற்றார் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டவர்கள் வரிசையாக பதவியேற்றனர். இந்தி, சமஸ்கிருதம், பஞ்சாபி, மராத்தி, ஆங்கிலம், போஜ்புரி, தெலுங்கு, ஒடியா, பெங்காலி, என பல மொழிகளிலும் எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
மக்களவையில் இரண்டாவது நாளாக இன்றும் எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். இதில் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தொகுதி வரிசை வாரியாக பதவி ஏற்றனர்.
முதலில் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்றார். அப்போது காந்தி, அம்பேத்கர், காமராஜர் வாழ்க என்று கூறி அவர் பதவியேற்றார். மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் பதவியேற்கும் போது தமிழ் வாழ்க, பெரியார், கருணாநிதி வாழ்க எனக் கூறி பதவியேற்றார்.
விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் தமிழ் வெல்க எனக் கூறி பதவியேற்றார்.
சிதம்பரம் தொகுதி எம்.பி.யும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன் அம்பேத்கர்,பெரியார் வாழ்க.. வாழ்க ஜனநாயகம்..எனக் கூறி பதவியேற்றுக் கொண்டார். இதுபோலவே டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் கனிமொழி உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்ற போது தலைவர்களின் பெயர்களை உச்சரித்தனர். கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.பி.க்கள் மார்க்சியம் வாழ்க, மதச்சார்பின்மை வாழ்க என்று உச்சரித்தனர்.
அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்.பி.யான ரவீந்திரநாத் குமார், எம்ஜிஆர் வாழ்க.. அம்மா வாழ்க.. என்ற கோஷத்துடன் பாஜகவின் தாரக மந்திரமான வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜே , ஜெய்ஹிந்த் என்ற கோஷங்களையும் உரக்க முழங்கினார்.
தமிழக எம்.பி.க்களில் பெரும்பாலானோர் மனசாட்சிப்படி, உளமாற என்று கூறி பிரமாணம் எடுத்த நிலையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான வைத்தியலிங்கம் கடவுளின் பெயரில் பிரமாணம் எடுத்துக் கொண்டார். தமிழக எம், பி.க்களில் பலரும் இவ்வாறு தலைவர்கள் மற்றும் கட்சிக் கொள்கைகளை முழங்கிய நிலையில், திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா மற்றும் பழனி மாணிக்கம் ஆகிய இருவர் மட்டுமே பதவியேற்பு வாசகத்தை மட்டுமே உச்சரித்து பதவியேற்றனர்.
தமிழக எம்.பி.க்கள் பதவிப் பிரமாணம் போது இப்படி தங்கள் இஷ்டத்துக்கு தமிழில் தலைவர்களின் பெயர்களையும், கொள்கைகளை முழக்கமிட்டது பாஜக எம்.பி.க்களுக்கு எரிச்சலை ஏற்படுத்திவிட்டது போலும். இதனால் எதிர்ப்பு அவர்கள் அடிக்கடி கூச்சலிட்டதால் அவ்வப்போது மக்களவையில் சலசலப்பும் ஏற்பட்டது.