திருப்பதி புறநகர் காவல் மாவட்ட எல்லையில் மிகவும் முக்கிய இடங்களாக திருப்பதி , திருமலை, ஸ்ரீகாளகஸ்தி உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளது. இதில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர் .
இது தவிர உள்ளூர் பொதுமக்கள், வியாபாரிகள் , மாணவர்கள் என தொடர்ந்து திருப்பதிக்கு வந்து செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களும், பக்தர்களும் தங்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்கள் மற்றும் அனைத்து விதமான புகார்களையும் இந்த புகார் பெட்டியில் பதிவு செய்யலாம் என எஸ்பி அன்பு ராஜன் தெரிவித்துள்ளார்.
சந்தேகப்படும் நபர், சந்தேகப்படக்கூடிய பொருட்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடைபெறக்கூடிய பாலியல் வன்முறை சம்பவங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான புகார்களையும் இந்த புகார் பெட்டியில் தெரிவிக்கலாம். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த புகார் பெட்டியில் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே பொதுமக்களும் பக்தர்களும் தயக்கமில்லாமல் யாருடைய உதவியும் இல்லாமல் எந்த மொழியில் உங்களுக்கு தெரிகிறதோ அந்த மொழியில் நீங்கள் புகாரை எழுதி இந்த பெட்டியில் செலுத்தலாம் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பதி புறநகர் காவல் மாவட்ட எல்லையில் 95 இடங்களில் இந்த புகார் பெட்டிகள் வைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு காவலர் நியமிக்கப்பட உள்ளனர். குறிப்பாக திருப்பதி பஸ் நிலையம், ரயில் நிலையம், தேவஸ்தான பக்தர்கள் ஓய்வறைகள், கோவில்கள் என அனைத்து இடங்களிலும் இந்த புகார் பெட்டி வைக்கப்பட உள்ளது.
இதேபோன்று ஏழுமலையான் கோவில் சுற்றியுள்ள திருமலையில் இரண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பக்தர்கள் அதிகம் கூடும் 10 இடங்களை தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. எனவே பக்தர்களும் பொதுமக்களும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எஸ்பி அன்பு ராஜன் தெரிவித்தார்.
-தமிழ்