நாடாளுமன்றத்தில் பிரதமரும், மத்திய அமைச்சர்கள் பலரும் இந்தியில் உறுதிமொழி ஏற்றனர். ஆனால், பல மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்கள் தாய்மொழிகளில் உறுதிமொழி ஏற்றனர்.
நாட்டின் 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் பணியாக, உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஒவ்வொரு உறுப்பினரும், உறுதிமொழி எடுத்து கொண்டு பதவியேற்றனர்.
மக்களவையின் தலைவரான பிரதமர் நரேந்தி மோடி முதன்முதலில் பதவியேற்றா். அவர் இந்தி மொழியில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, ஸ்மிரிதி இரானி ஆகியோரும் இந்தியில் உறுதிமொழி கூறி, பதவியேற்றனர். பா.ஜ.க. தலைமை செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான பத்ருஹரி மக்தாப் தனது தாய்மொழியான ஒடியா மொழியில் பதவி ஏற்றார்.
மத்திய அமைச்சர்கள் ஹர்சவர்தன், ஸ்ரீபாத் நாயக், அஸ்வினி சவுபே மற்றும் மீனாட்சி லெகி, பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோர் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றனர். கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, பிரகலாத் ஜோஷி ஆகியோர் மந்திரிகள் கன்னடத்திலும், பஞ்சாப்பைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் பஞ்சாபி மொழியிலும் உறுதிமொழி ஏற்றனர்.
அரவிந்த் சாவந்த், ராவ் சாகிப் பட்டீல் ஆகியோர் தங்களது மராத்தி மொழியிலும், ஜிதேந்திரசிங் தனது தாய்மொழியான டோக்ரி மொழியிலும், பாபுல் சுப்ரியோ, முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஆகியோர் ஆங்கிலத்திலும், ராமேஸ்வரி டெலி அசாமி மொழியிலும், தேவஸ்ரீ சவுத்ரி வங்காள மொழியிலும் பதவி ஏற்றனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று காலையில் மக்களவைக்கு வரவில்லை. மதியம் அவர் வந்து பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரான சோனியா காந்தி இன்று(ஜூன்18) பதவியேற்று கொள்கிறார். தமிழக எம்.பி.க்களும் இன்றுதான் பதவியேற்கின்றனர்.