தும்பைப்பட்டி தந்த தூய்மையின் சிகரம்...! நேர்மையின் அடையாளம்..! கக்கன் பற்றிய சில நினைவுகள்

Advertisement

ஜூன் 18: கக்கன் பிறந்த தினம்

ஊரை அடித்து, தன் ஏழு பரம்பரைக்கும் சொத்து சேர்க்கும் மந்திரிகள் இருக்கும் நம் தமிழ்நாட்டில், சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன தலைவர்களில் முக்கியமானவர் கக்கன்.

தமிழக அரசியல் வரலாற்றில் கக்கன் போன்ற நேர்மை, தூய்மை, நாணயம் என்பதற்கு உதாரணமான அமைச்சரை இனிமேல் பார்ப்பது கடினம் தான்.

நேர்மையான அரசியலின் அடையாளம் என்று தமிழகமே கொண்டாடும் தலைவர் கக்கன். இப்படியொரு தலைவர் தமிழகத்தில் ரத்தமும் சதையுமாக இருந்திருக்கிறார், இயங்கியிருக்கிறார் என்று சொன்னால் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பார்களா? என்பது ரொம்பவே சந்தேகம்தான். 1909-ம் ஆண்டு ஜூன் 18-ம் நாளில் மதுரை மேலூர் அருகேயுள்ள தும்பைப்பட்டியைச் சேர்ந்த பூசாரி கக்கன் - குப்பி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் தான் இந்தக் கக்கன். குடும்பத்தின் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை இடையிடையே விட நேர்ந்தது. எனினும், பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பள்ளிப்படிப்பை முடித்தார் கக்கன்.

சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்துகொண்டிருந்த காலகட்டம் அது. பள்ளி மாணவரான கக்கனுக்கும் சுதந்திர வேட்கை தொற்றிக்கொண்டது. காந்தியும் காங்கிரசும் தான் கக்கனுக்கான ஈர்ப்புப் புள்ளிகள். படிக்கும் நேரம் போக எஞ்சிய நேரங்களில் அரசியலில் ஆர்வம் செலுத்தினார். படிப்பு சரியாக வரவில்லை. என்றாலும், கக்கனின் காங்கிரஸ் பாசத்தையும் மக்களுக்குத் தொண்டாற்றும் ஆர்வத்தையும் புரிந்துகொண்ட வைத்தியநாதய்யர், மதுரையில் உள்ள சேவாலயம் என்கிற விடுதியில் காப்பாளர் வேலையைக் கக்கனுக்கு வாங்கிக் கொடுத்தார். அதன் பிறகுதான் அரசியல் நடவடிக்கைகளில் அதிக அளவில் ஈடுபட்டார்.

காந்தி மதுரைக்கு வந்தபோது அவருக்கு கக்கனை அறிமுகம் செய்துவைத்தார் என்.எம்.ஆர்.சுப்பராமன் என்கிற மூத்த காங்கிரஸ் தலைவர். அது கக்கன் வாழ்வில் முக்கியமான நிகழ்வு. தமிழகத்தின் பல இடங்களுக்கும் காந்திக்குத் துணையாகச் சென்று வந்தார் கக்கன். அந்தப் பயணமும் பழக்கமும் கக்கனின் மனதில் தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயப் பிரவேசத்தை வைத்தியநாதய்யர் நடத்தியபோது, அந்தப் போராட்டத்தில் பங்கேற்றார் கக்கன்.

1940-ல் மதுரை மேலூர் வட்டார காங்கிரஸ் செயலாளரானார். அதுதான் காங்கிரசில் அவர் வகித்த முதல் பதவி. அப்போது காந்தி அறிவித்த போராட்டம் ஒன்றில் பங்கேற்ற கக்கன், பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார். கக்கனின் முதல் சிறைவாசமும் அதுதான். அதன் பிறகு, போராட்டங்களும் சிறைவாசங்களும் தொடர்ந்தன. வட்டார காங்கிரஸ் தலைவராக இருந்த கக்கன், மதுரை மாவட்டப் பொருளாளரானார்.

1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் ஈடுபட்டபோது, போலீஸாரின் கண்ணில் சிக்காமல் தப்பிக்கத் தலைமறைவாக இயங்கினார் கக்கன். ஒருகட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். தமிழகத்தில் நடக்கும் போராட்டத்தைப் பற்றிய முழு அம்சங்களும் கக்கனுக்குத் தெரியுமென்பதால், தலைமறைவாக உள்ள மற்ற தலைவர்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லுமாறு சித்திரவதை செய்தனர் காவலர்கள். ஆனால், கக்கனிடமிருந்து ஒரு துப்புகூடக் கிடைக்கவில்லை. ஆத்திரம் அடைந்த பிரிட்டிஷ் அரசு, கக்கனை அலிப்பூர் சிறைக்கு அனுப்பிவைத்தது. 18 மாதங்களுக்குக் கொடும் சிறைவாசம் அனுபவித்தார் கக்கன்.

1952-ல் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடந்தபோது, மதுரை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கக்கனின் எளிமையான வாழ்க்கைமுறையும் பொதுமக்களை அணுகும் பாங்கும் மதுரை வட்டாரத்தில் அவரைச் செல்வாக்கு மிக்க தலைவராக உயர்த்தியது. 1954-ல் காமராஜர் முதல்வரானபோது, அவர் வகித்துவந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கக்கனுக்குத் தரப்பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய கக்கன், 1957-ல் நடந்த தேர்தலில் மேலூர் சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் அமைந்த காமராஜர் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, தாழ்த்தப்பட்டோர் நலத் துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சரானார் கக்கன்.

அமைச்சர் பதவியில் இருந்தபோது அதிகபட்ச நேர்மையைக் கடைப்பிடித்தவர் கக்கன். சிபாரிசு, பரிந்துரை போன்ற வார்த்தைகளை அடியோடு நிராகரித்தார். துறைசார்ந்த திட்டங்களைக் கொண்டுவருவதில் அக்கறையும் ஆர்வமும் செலுத்தினார். அமைச்சராக இருந்தபோதும் தனது குழந்தைகளை அரசு மாநகராட்சிப் பள்ளிகளிலேயே படிக்கவைத்தார்.

1962 தேர்தலில், சமயநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கக்கனை விவசாயத் துறை அமைச்சராக்கினார் காமராஜர். மணிமுத்தாறு, அமராவதி போன்ற நீர்த்தேக்கத் திட்டங்கள் அமலுக்கு வந்தது, மேட்டூர் அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டது, வைகை, பாலாறு திட்டங்களை நிறைவேற்றியது, பூண்டி நீர்ப்பாசன ஆய்வு மையம் அமைத்தது ஆகியவற்றில் கக்கனின் பங்களிப்பு முக்கியமானது.

1963-ல் காமராஜர் ராஜினாமா செய்ததை அடுத்து, பக்தவத்சலம் முதல்வரானார். அப்போது தமிழக அரசின் உள்துறை அமைச்சரானார் கக்கன். தேர்வுகள் வழியே காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது, காவலர் பயிற்சிப் பள்ளிகளை உருவாக்கியது, சாதிக் கலவரங்கள் மூள்வதை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க ரகசியக் காவலர் பிரிவைத் தொடங்கியது, லஞ்ச ஒழிப்புக் காவல் பிரிவை உருவாக்கியது என கக்கனின் பணிகள் அநேகம்.

1967 தேர்தலில் மேலூர் தெற்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ.பி.ராமனிடம் வெற்றிவாய்ப்பை இழந்தார் கக்கன். தூய்மையான அரசியலுக்கு விழுந்த சம்மட்டி அடியாகவே கக்கனின் தோல்வி பார்க்கப்பட்டது.

தொடர்ந்து 1971 பொதுத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளராகக் கக்கனை நிறுத்தினார் காமராஜர். வெற்றி வசப்படவில்லை.இனி அரசியலில் நேர்மைக்கும், தூய்மைக்கும், எளிமைக்கும் இடமில்லை என்ற காலக்கட்டம் தமிழகத்தில் முளை விட ஆரம்பித்த அப்போது தான். இதனால் வெறுத்துப் போன கக்கன், அரசியலிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டார்.

பொது வாழ்க்கையில் தனக்கென்று எதுவுமே சேர்த்து வைக்காத கக்கன் தன் இறுதிக் காலத்தில் மிகவும் சிரமப்பட்டார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதும் அரசுப் பேருந்தில் பயணிப்பதும் வரிசைகளில் காத்திருப்பதும் பொருளாதார ரீதியாகச் சிரமப்படுவதும் பத்திரிகைகளில் அவ்வப்போது செய்திகளாக வந்தன. அதைப் பார்த்த சிவாஜி கணேசன், தனக்குப் பரிசாக வந்த தங்கச் சங்கிலி ஒன்றைப் பொது வெளியில் ஏலம் விட்டு, அதில் கிடைத்த தொகையைத் தனியார் நிதி நிறுவனத்தில் நிரந்தர முதலீடு செய்து, அதன்மூலம் கிடைக்கும் வட்டித்தொகை ஒவ்வொரு மாதமும் கக்கனுக்குக் கிடைக்க ஏற்பாடுசெய்தார்.

சில ஆண்டுகள் வீட்டிலேயே இருந்த கக்கனுக்கு மீண்டும் உடல்நலன் பாதிக்கப்படவே, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரின் உத்தரவால் தரமான மருத்துவ சிகிச்சைகள் தரப்பட்டபோதும் கக்கனுடைய உடல்நலன் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே போனது. இறுதியாக, 23 டிசம்பர் 1981 அன்று மரணம் அடைந்தார் கக்கன்.

அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதிகபட்ச நேர்மையைக் கடைப்பிடித்த கக்கனைப் போல் இன்னொரு தலைவர் வருவாரா என்று பேசவைத்தது அவரது வாழ்நாள் சாதனை. கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலைவர்களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க… ‘குறை சொல்லமுடியாத மனிதர்’ என்று தமிழக அரசியல் வரலாற்றின் கல்வெட்டில், காலத்துக்கும் அழியாதபடி பொறிக்கப்பட்டிருக்கிறது கக்கனின் பெயர் என்றால் அது தான் நிஜத்திலும் நிஜம்.

வட தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை மக்களே

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>